சேலம் அஸ்தம்பட்டி பழனியப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(47). கடந்த 2006ம் ஆண்டு, சேலத்தில் முத்திரைத்தாள் தாசில்தாராக பணியாற்றினார். தற்போது, தஞ்சாவூரில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 540 ரூபாய், 80 சவரன் தங்க நகை, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் முக்கிய ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். மோகனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் மசநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும், சோதனை நடத்தி, அங்கிருந்தும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
நாமக்கல்லில் உள்ள கூட்டுறவு வங்கியில் மோகனின் லாக்கரை, போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில், குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் சிக்கவில்லை. சேலத்தில் உள்ள கனரா வங்கியில் மோகனின் லாக்கரை, போலீசார் இன்று சோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். மார்க்கெட் மதிப்பைக் காட்டிலும், நில மதிப்பை குறைத்துக் காட்டி, அதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணத்தை குறைக்க மோகன் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
மோகன் மூலம் பதிவு செய்யப்பட்ட பல நிலங்களின் மதிப்பீடு, மார்க்கெட் மதிப்பை காட்டிலும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மோகனுக்கு நாமக்கல் மாவட்டம் மசநாயக்கன்பட்டியில் வீடு, பழனியப்பா நகரில் 3,000 சதுரஅடி நிலம், வீடு மற்றும் பூர்வீக வீடு, தங்க நகை என, தற்போதைய மார்க்கெட் மதிப்புப்படி இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
19 ஆகஸ்ட் 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக