புதியவை :

Grab the widget  Tech Dreams

25 ஆகஸ்ட் 2009

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை: தமிழகம முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புரோக்கர்கள், அரசு ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கினர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை, திருச்சி, திருநெல்வேலி என பல இடங்களில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் லட்சக்கணக்கில் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் 16 பேர் கைது...

சென்னை வேளச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் போலீசார் 13 புரோக்கர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 36 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அயனாவரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 36 ஆயிரத்து 495 பறிமுதல் செய்யப்ப்டடது. மேலும் போலீசார் சேத்துப்பட்டு ரகு, அயனாவரம் யோகேந்திர பாபு, துரைசாமி என மூன்று புரோக்கர்களை கைது செய்தனர்.

இங்கு சில புரோக்கர்கள் கையில் வைத்திருந்த லஞ்ச பணத்தை தெருவில் தூக்கி எறிந்துவிட்டு ஒட்டம் எடுத்தனர். இதையடுத்து போலீசார் தெருவில் கிடந்த ரூ. 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மதுரையில் ரூ. 1 லட்சம்...

மதுரை பழங்காநத்தம் பை-பாஸ் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கர் முத்துக்குமார் என்பவரிடம் இருந்து ரூ. 95 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.

அதே போல் சமயநல்லூர் ஆசிரியர் ஒருவரிடம் வாங்கிய ரூ. 3 ஆயிரத்து 599 லஞ்ச பணத்தையும், அலுவலக உதவியாளர் சுப்புலட்சுமி என்பவரின் மேஜைக்கு அருகே கிடந்த ரூ. 1,330 பணத்தையும் கைப்பற்றினர்.

இதையடுத்து போலீசார் சார்பதிவாளர் திருஞானம், புரோக்கர் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருநெல்வேலியில் 2 சார்பதிவாளர் மீது வழக்கு...

திருநெல்வேலி கலெக்டர் வளாகத்தில் இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் எஸ்கால், ராஜூ மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

மாலை 4 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத, அங்காங்கே சிதறி கிடந்த ரூ. 6 ஆயிரத்து 85 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அரசு கணக்கில் சேர வேண்டிய 19 ஆயிரத்து 418 ரூபாய் மாயமாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய ஆவணம் ஒன்றும் காணாமல் போய்விட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர்கள் முருகேசன், அருணாசலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசியில் அலுவலகத்துக்கு சீல்...

சிவகாசியில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு அரசு அறிவித்துள்ள உதவித்தொகையை கேட்டு விஜயலட்சுமி என்பவர் விண்ணப்பித்தார். கடந்த ஜூன் 18ம் தேதி அவர் வி்ண்ணப்பித்த போதிலும் அவருக்கு இதுவரை அது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவர் விரிவாக்க அதிகாரி ஜெயலட்சுமியை சந்தித்தார். அப்போது அவர் ரூ. ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி விஜயலட்சுமி ரசாயனம் தடவிய ரூ. ஆயிரத்தை விரிவாக்க அதிகாரி ஜெயலட்சுமியிடம் கொடுத்தார். பின்னர் விஜயலட்சுமி அதிகாரிகளிடம் பணத்தை கொடுத்த விவரத்தை தெரிவித்தார்.

அதிகாரிகள் ஜெயலட்சுமியிடம் சோதனை நடத்தினர். ஆனால், பணம் சிக்கவில்லை. இதையடுத்து பெண் போலீஸ் வந்து அவரை முழுமையாக சோதனையிட்டது. ஆனாலும், பணம் எங்கே போனது என்று தெரியவில்லை. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலட்சுமியை கை கழுவ சொன்னார்கள். அப்போது அவர் கையில் ரூபாய் நோட்டில் இருந்த ரசாயனம் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கையும், களவுமாக மாட்டிய போதும் அவர் உண்மையை ஒப்புகொள்ளவில்லை. இதையடு்தது போலீசார் அந்த அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

திருச்சியில் 15 பேர் கைது...

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனை நடத்தியது. இவர்களை கண்டதும் அங்கிருந்த ஊழியர்கள் குப்பை கூடைகள், பீரோக்கள் மற்றும் கணக்கு பதிவேடுகளுக்குள் பணத்தை மறைக்க முயன்றனர்.

இந்த முயற்சிகளை கண்டிபிடித்த போலீஸார் ரூ. 53 ஆயிரத்து 575 பணத்தை பறிமுதல் செய்தனர். சார்பதிவாளர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணத்தில் ரூ. 2 லட்சம்...

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளில் அதிகபட்சமாக அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 2 லட்சம் கைப்பற்றப்பட்டது. காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய மூன்று மணி நேர சோதனையில் போலீசார் ரூ. 27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

திண்டுக்கல்லில் சார்பதிவாளர் கைது...

திண்டுக்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் ஆயிரக்கணக்கில் பணத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக சார்பதிவாளர் வெங்கடசாமி, உதவியாளர் ரத்தினசாமி, பத்திர எழுத்தாளர் சேகர், சரவணவேல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் போதிய விளக்கம் கொடுக்காததை அடுத்து அவர்கள் கைது செய்யப்ப்டடனர்.

நாகூரில் நடத்தப்பட்ட சோதனையில் சரவணப்பெருமாள் (48), சிவராஜ்(45), ராஜ்குமார்(42) என மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 4 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் நடந்த சோதனையில் சிவகுமார், குருசாமி, நாகலட்சுமி, கருப்பையா என நான்கு பத்திர எழுத்தாளர்களிடம் இருந்து ரூ. 8 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதே போல் தேனி, திருப்புவனம், குன்னூர் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளிடம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக