
13 ஆகஸ்ட் 2009
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்

திருச்சி:வழக்கு பதியாமல் இருக்க, அரிசி ஆலை அதிபரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.திருச்சி விமான நிலைய பகுதியில் வசிப்பவர் செல்லையா(57); அரிசி ஆலை நடத்தி வருகிறார். இந்த மில்லில் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனி, அவரது மனைவி ரம்யா வேலை செய்வதாகக் கூறி, முன்பணமாக 17 ஆயிரம் ரூபாய் வாங்கி இருந்தனர்.ஆனால், வேலைக்கு வராததோடு, பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த 6ம் தேதி வீட்டை காலி செய்து விட்டு ரம்யா திண்டுக்கல்லுக்கு புறப்பட தயாரானார். தகவலறிந்து அங்கு சென்ற செல்லையா, ரம்யாவைத் தாக்கினார். இதுகுறித்து விமானநிலைய போலீசில் ரம்யா புகார் அளித்தார்.இந்த புகார் மீது வழக்கு பதியாமல் இருக்க, 5,000 ரூபாய் லஞ்சம் தரவேண்டுமென, செல்லையாவிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் கேட்டார்.இதுகுறித்து செல்லையா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அவர்கள் அறிவுரைப்படி, நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் 5,000 ரூபாய் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார், இன்ஸ்பெக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடித்தனர்.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
12 ஆகஸ்ட் 2009
3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி செல்வதுரை .
|
TyPÖ ÙTVŸ UÖ¼\• ÙNšV |
லஞ்ச வழக்கில் இரு நகராட்சி அலுவலர்களுக்கு மூன்றாண்டு: ஐகோர்ட் உறுதி செய்தது
மதுரை: நாகர்கோவிலில் லஞ்ச வழக்கில் சிக்கிய நகராட்சி அலுவர்களுக்கு சப்- கோர்ட் வழங்கிய மூன்று ஆண்டு சிறையை மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. நாகர்கோவில் நேசமணிநகரை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் புதியவீடு கட்டினார். இதற்கு நகராட்சி சார்பில், வீட்டு வரி நிர்ணயிக்கப்பட்டது.
வரியை குறைத்து நிர்ணயம் செய்ய வருவாய் அதிகாரி கருணாகரன், பில் கலெக்டர் கோலப்பன் லஞ்சம் கேட்டனர். ராஜாசிங் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பிறகு ராஜா சிங் லஞ்ச பணத்தை அவர்களிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சப் -கோர்ட் 2000 செப்.,29ல் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து, இருவரும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு செய்தனர். இவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு வக்கீல் சிவ.ஐயப்பன் ஆட்சேபம் தெரிவித்தார். அதை ஏற்று, மேல்முறையீடு மனுக்களை நீதிபதி ஏ.செல்வம் தள்ளுபடி செய்தார். ""கீழ்கோர்ட் உத்தரவில் தலையிடும் அளவுக்கு போதிய காரணங்கள் இல்லை. சாட்சியங்கள், சான்றாவணங்கள் குற்றத்தை நிரூப்பிப்பதாக உள்ளன,'' எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.
மின்வாரிய வணிக ஆய்வாளர் ராஜேந்திரன் அதிரடி கைது
சென்னை: "மூன்று பேஸ்' மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய, மின்வாரிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர், நெசப்பாக்கம் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அப்பகுதியில், "யாதவா நியூஸ் மார்ட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் "சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு உள்ளது. "மூன்று பேஸ்' மின் இணைப்பு வேண்டி, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு கட்டணமாக 12 ஆயிரத்து 75 ரூபாய் செலுத்தினார். மின்வாரிய வணிக ஆய்வாளர் (கமர்சியல் இன்ஸ்பெக்டர்) ராஜேந்திரன்(45), மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்டு, இணைப்பு வழங்காமல் தாமதம் செய்தார். மின் இணைப்பு வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவர் கேட்ட தொகையை தருவதாக சுப்பிரமணி கூறினார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், இமானுவேல் ஞானசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று மாலை சுப்பிரமணியின் கடைக்குச் சென்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், லஞ்சப் பணத்தை வாங்கினார்.
அருகேயிருந்த டாஸ்மாக் கடைக்குள் புகுந்தார். பின்தொடர்ந்து சென்ற தனிப்படையினர், கமர்சியல் இன்ஸ்பெக்டரை கைது செய்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.
11 ஆகஸ்ட் 2009
06 ஆகஸ்ட் 2009
ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனச்சரகர் நடராஜன் கைது
திருவண்ணாமலை: செங்கம் அருகே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனச்சரகரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், வனச்சரகராக நடராஜன் பணிபுரிந்து வருகிறார்.
ஆனந்தவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் காட்டுப்பகுதியில், சிமென்ட் தொட்டி கட்டும் பணியை 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், டெண்டர் எடுத்து சின்னக்கண்ணு என்பவர் பணி செய்து முடித்தார்.கடந்த ஜூன் மாதம் அவர் இறந்துவிட்டார். அந்த பணத்தை பெற சின்னக்கண்ணு மகன் சண்முகம் வனச்சரகர் நடராஜனை அணுகினார். "15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், உடனடியாக டெண்டர் பணிக்கான பணத்தை கொடுப்பதாக' அவர் தெரிவித்தார். 10 ஆயிரம் ரூபாய் தருவதாக சண்முகம் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து, சண்முகம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, 10 ஆயிரம் ரூபாயை சண்முகம் கொடுத்த போது, அதை வாங்கிய நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
"சபாஷ்' விஜிலென்ஸ்
லஞ்சம் வாங்கிய அதிகாரி ராஜசேகரன் கைது

சென்னை: வீட்டை இடித்து கட்டுபவரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ.,) திட்ட உதவியாளர் கைது செய்யப்பட்டார்
சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் சேகரன். பர்னிச்சர் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்கிறார். தனக்குச் சொந்தமான பழைய வீட்டை இடித்துவிட்டு, அருகில் காலியாக உள்ள இடத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டத் திட்டமிட்டார். இதற்கு அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பித்தார்.
புதிய கட்டடம் கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ.,வுக்கு 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினார். அதை பரிசீலித்து, மாநகராட்சிக்கு அந்த பைலை அனுப்பாமல், சி.எம்.டி.ஏ., திட்ட உதவியாளர் ராஜசேகரன் (56) கிடப்பில் போட்டார். அதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு த்துறை எஸ்.பி., பவானி ஈஸ்வரியிடம் சேகரன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இமானுவேல் ஞானசேகர், உச்சப்பட்டி பரமசாமி, அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று மாலை காத்திருந்தனர். ரசாயன கலவை தடவப்பட்ட லஞ்சப் பணத்தை எடுத்துச் சென்ற சேகரனிடம், பணத்தை வாங்காத ராஜசேகரன், தரைத்தளத்தில் உள்ள கேன்டீனுக்கு அழைத்து சென்று டீ வாங்கிக்கொடுத்தார்.
அப்போது லஞ்ச பணத்தை வாங்கியபோது, விஜிலென்ஸ் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். போலீசாரிடம் ராஜசேகரன், "சார்! நான் மிரட்டி லஞ்சம் வாங்கவில்லை. அவரே விருப்பப்பட்டு அன்பளிப்பாகத் தான் கொடுத்தார். என்னை கைது செய்யாதீர்கள்' என கெஞ்சினார்.
லஞ்சம் வாங்கிய இ.எஸ்.ஐ - டைரக்டர் எழிலரசி கைது


சென்னை : சென்னையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்குவதற்காக சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய, இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு, சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்காக, மருந்து கம்பெனிகளிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட இ.எஸ்.ஐ., டைரக்டர் எழிலரசியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவரை காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எழிலரசி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் லஞ்சம் கொடுத்த மருந்து கம்பெனி பிரதிநிதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருந்து நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் எழிலரசி, ஆடம்பர வாழ்க்கை காரணமாக 40 லட்சம் ரூபாய் வரை கடன் வைத்துள்ளதும், அந்த கடனை வேலையில் இருக்கும் போதே அடைத்து விட வேண்டும் என்ற நோக்கில், லஞ்சம் வாங்கத் துவங்கியதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் எழிலரசி, நேற்று முன்தினம் இரவு இ.எஸ்.ஐ.,க்கு மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் 8.53 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பிடிபட்டார்.
இவரது சொந்த ஊர், திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி. இவரது கணவர் பக்ருதீன் வக்கீல். எழிலரசியின் இரண்டு மகள்களும் டாக்டருக்கு படித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
பக்ருதீனும், டாக்டர் எழிலரசியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எழிலரசி ஆரம்பம் முதலே ஆடம்பரத்தை கடைபிடித்தவர். இரண்டு மகள்களையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். பல இடங்களில் அவர் கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
இந்நிலையில், எழிலரசியின் கணவர் பக்ருதீனின் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்தன. அவரது மூத்த மகள் தானமாகக் கொடுத்த கிட்னி மூலம் தற்போது பக்ருதீன் வாழ்ந்து வருகிறார். பக்ருதீனின் கிட்னி ஆபரேஷனுக்கு மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை எழிலரசி செலவு செய்துள்ளார்.
தற்போது 40 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. அரசு டாக்டராக இருந்து வந்த எழிலரசி படிப்படியாக முன்னேறி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வில் அவர் சென்னையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்ய சலுகை காட்டுவதற்காக, மருந்து நிறுவனங்களிடம் நேற்று முன்தினம் இரவு டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் எழிலரசி கைது செய்யப்பட்ட அதே நேரம், துவரங்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடந்த சோதனையில், பெரிய அளவில் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனராக பணியாற்றிய போது, எழிலரசி நேர்மையானவர் என்றே கூறப்படுகிறது. இதை, அவருடன் பணியாற்றிய அலுவலர்களும் உறுதி செய்கின்றனர்.
ஆனால், பணிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், தனக்குள்ள 40 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் பேரில் தான், டாக்டர் எழிலரசி லஞ்சம் வாங்கியுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
05 ஆகஸ்ட் 2009
சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

சென்னை: சென்னைத் துறைமுக "மாஜி' தலைவர் சுரேஷ் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.வங்கி லாக்கர், வீடுகளில் நடந்த சோதனையில், இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின. அதில் 3.5 கிலோ தங்க நகைகள், 6,400 அமெரிக்க டாலர்கள். கர்நாடகாவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், மத்திய பிரதேச "கேடர்' ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மத்திய அரசு மாற்றுப் பணியில் 2004ம் ஆண்டு, சென்னைத் துறைமுக கழகத் தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜூன் 30ம் தேதி வரை அப்பணியில் இருந்தார். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சேது சமுத்திரத் திட்டத் தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றிருந்தார். மத்திய அமைச்சர் பாலுவிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இரண்டாவது கன்டெய்னர் டெர்மினல், நிலக்கரி மாசால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கையாளும் திட்டம் போன்றவை, இவரது காலத்தில் செய்யப்பட்ட முக்கிய பணிகள்.
இதில், கன்வேயர் மூலம் நிலக்கரி கையாளும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து சென்னைத் துறைமுக கழகத் தலைவராக இருந்த சுரேஷ் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு அழைக்கப் பட்டார். தற்போது மருத்துவ விடுப்பில், சென்னைத் துறைமுகத்தில் உள்ள துறைமுகத் தலைவருக்கான பங்களாவில் சுரேஷ், தொடர்ந்து வசித்து வருகிறார். சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல், தென்னாப்ரிக்காவில் இருந்து புறப்பட்டது.
அக்கப்பலில் போதிய பாதுகாப்பு காரணிகள் இல்லாததால், தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்து சென்னை வந்த அக்கப்பலை, முறைகேடாக 2007ம் ஆண்டு முதல் இதுவரை துறைமுகத்தில் நிறுத்த சுரேஷ் அனுமதித்தார். சென்னைத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்கள், துறைமுகத்தில் நிறுத்த (பெர்த்) இடமில்லாமல் பல மாதங்களாக துறைமுகத்திற்கு வெளியே, சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தப் பட்டுள்ளன.
துறைமுகத்தில் நிற்கும், "சாஜ் சார்ஜா' என்ற அக்கப்பலில் எந்த ஊழியர்களும் தற்போது இல்லை. துருப்பிடித்து, இயக்க முடியாத நிலையில் உள்ள அக்கப்பல், ஏலம் விட்டு உடைக்கும் நிலையில் உள்ளது. சிங்கப்பூர் நிறுவன கப்பலை துறைமுகத்தில் முறைகேடாக நிறுத்திய வகையில், சென்னைத் துறைமுகத்திற்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன், சுரேஷ் மீது பல்வேறு முறைகேடுகள் எழுந்தன.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் நுழைந்தனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சோதனை நடந்தது. துறைமுக மாஜி தலைவர் சுரேஷ், துறைமுக பாதுகாப்பாளர் ஜின்னா, போக்குவரத்து மேலாளர் வெங்கடேஸ்வரலு உள்ளிட்டோரின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
சுரேசுக்குச் சொந்தமாக சென்னை நகர், கிழக்கு கடற்கரைச் சாலை, கொடைக்கானல், பெங்களூருவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன. வீடுகளில் நடந்த சோதனையில் 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.தங்க நகைகள், சொத்து ஆவணங்களின் மொத்த மதிப்பு இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாய் என சி.பி.ஐ., போலீசார் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க டாலர் வைத்திருந்த சுரேஷ் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு, கூட்டு சதி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் சி.பி.ஐ., போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வனத்துறை லஞ்ச அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை: லஞ்சம் பெற்ற குற்றச் சாட் டில் கைது செய்யப்பட்ட வனத்துறை அதிகாரி ராஜலிங்க ராஜா சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். சென்னையில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் இருந்தவர் ராஜலிங்க ராஜா
கேரளாவில் இருந்து கொண்டு வரப் பட்ட செம்மரக் கட்டைகளை எடுத்துச் செல்ல, வியாபாரி ஒருவர் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி வழங்க, கடந்த மாதம் 15ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ராஜலிங்க ராஜா கைது செய்யப்பட்டார். அவர் ரிமாண்ட் செய்யப் பட்டு, போலீஸ் காவலில் உள்ளார்.
அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில், "உதவி வனப் பாதுகாவலர் ராஜலிங்க ராஜா ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் 15ம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வெளியிடும் வரை அவருக்கு விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும். அவர் முன் அனுமதி இன்றி சென்னையை விட்டு செல்லக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.
03 ஆகஸ்ட் 2009
தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாத கடைசி நாளில் அடுத்த மாதத்திற்கான ஒதுக்கீடுகள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்கப்படும். இவ்வாறு ஒதுக்கீடுகள் வழங்க வரும் ரேஷன் கடை ஊழியர்களிடம் தொழிலாளர் துறை அதிகாரிகள் மிரட்ட பணம் பறிப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.
இதன்படி அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கடைகளுக்கான ஒதுக்கீடுகளை பெற வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் நாகர்கோவில் 1வது சரகம் தொழிலாளர் துறை பெண் சப் இன்ஸ்பெக்டர் உமா மிரட்டி பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான இட ஒதுக்கீடுகளை பெறுவதற்கு நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் நாகர்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்திற்கு வந்தனர். தாலுகா அலுவலக வளாகத்தின் அருகில் ஒரு ஆட்டோவில் இருந்த தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் உமா, அங்கு வரும் ஊழியர்களிடம் 50, 100 ரூபாய் என வசூலித்துக்கொண்டிருந்தார்.
இதுகுறித்த தகவலின்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான துணை ஆய்வு குழு அலுவலர் நாராயணன், கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் மறைந்து நின்று கண்காணித்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் உமா லஞ்சம் வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பெண் போலீசாரின் உதவியுடன் அவரது உடமைகளை சோதனையிட்ட போது கணக்கில் வராத 6650 ரூபாய் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர் சரியான விவரம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவிலில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன்னால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரியை கைது செய்த தகவல் அறிந்து அந்த பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப்போல் கடந்த மாதம் கடைசி நாளான 20ம் தேதி விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இந்த மாதம் தொழிலாளர் துறை சப் இன்ஸ்பெக்டர் சிக்கியுள்ளார். இதைப்போல் தொடர்ந்து திடீர் சோதனை நடத்தி லஞ்சம் பெறுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
02 ஆகஸ்ட் 2009
லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்

திருச்சி: புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திருச்சியில் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன்(45); திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை முதல் வாரத்தில் கடையை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து, ஜூலை 19ம் தேதி கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனது தெரிந்தது. சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் மணிமாறன் புகார் அளித்தார். புகாரை பெற்ற எஸ்.ஐ., முத்துக்குமார் ஒருவாரம் கழித்து வருமாறு கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து கடந்த 30ம் தேதி சென்ற மணிமாறனிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என எஸ்.ஐ., முத்துக்குமார் கேட்டுள்ளார். "உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வளவு பணம் தர இயலாது' என கூறிய மணிமாறனிடம், 1,500 ரூபாய் கொடுத்தால் தான் வழக்கு பதிய முடியும் என எஸ்.ஐ., கறாராக கூறியுள்ளார்.
பணம் கொடுக்க விருப்பமில்லாத மணிமாறன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார். நேற்று மதியம் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணிமாறன் அங்கிருந்த எஸ்.ஐ., முத்துக்குமாரிடம் அவர் கேட்ட 1,500 ரூபாய் லஞ்ச பணத்தைக் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏ.சி., அம்பிகாபதி தலைமையிலான குழுவினர், லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., முத்துக்குமாரை கைது செய்தனர்.
லஞ்சப்பணத்தில் ரூ.27 லட்சத்திற்கு சொத்து: மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் தங்கராஜ், லஞ்சப்பணத்தில் 27 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரியவந்ததையடுத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த அலுவலகத்தில் நேற்று முன் தினம் மாலை லஞ்சஒழிப்புத் துறை டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். புரோக்கர்கள் முத்துபாண்டி, விக்னேஷ்வர், செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 18,650 ரூபாய் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அந்த பணம் அலுவலக கண்காணிப்பாளர் மனோகர், வாகன ஆய்வாளர் தங்கராஜூக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நேற்றிரவு கே.கே.நகரில் உள்ள தங்கராஜ் வீட்டில் சோதனை நடந்தது. ஐந்து வங்கிகளில் 27 லட்சம் ரூபாய்க்கு நிரந்தர வைப்புத் தொகை செய்திருந்ததற்கான 58 ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.
இரவு முழுவதும் லஞ்சஒழிப்பு அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. நேற்று மாலை கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். லஞ்சஒழிப்பு போலீசார் கூறுகையில், ""தங்கராஜ் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பதிவு எண், ஆர்.சி., புக் இல்லாமல் காரை உபயோகித்த கண்காணிப்பாளர் மனோகருக்கும், இதில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க உள்ளோம். புரோக்கர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம்,'' என்றனர்.
உறவினர் வீட்டில் ரசீதுகள்: "என்றைக்காவது ஒரு நாள் லஞ்சஒழிப்பு போலீசில் சிக்குவோம்' என்று கருதிய தங்கராஜ், மதுரை டோக்நகரில் வசிக்கும் தனது உறவுக்கார பெண்மணி செல்வம் வீட்டில், வங்கிகளில் டெபாசிட் செய்ததற்கான பல ஆவணங்களை பதுக்கியிருக்கிறார். இதையும் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

