
திருவாரூர்: தனியார் துப்புரவுப் பணி கான்ட்ராக்டரிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருவாரூர் நகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானைச் சேர்ந்தவர் மயில்வாகனன்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக எழுத்தர். அரசு பணியில் இருக்கும் இவர், கிடாரங்கொண்டான் கவுன்சிலராகவும் இருந்தார். நகர மன்றத்தில் எதிர்ப்பு வலுத்ததால், கடந்த இரு மாதங்களுக்கு முன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் கவுன்சிலராக இருந்த போது, நகராட்சி பகுதியில் துப்புரவுப் பணியை ஸ்ரீ மாதா டெவலப்மென்ட் சோஷியல் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று செய்து வந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் ராஜா. இவர், திருவாரூர் நகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், திருநெல்வேலியில் இருந்து திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதே பிரிவில் சுகாதார ஆய்வாளராக திண்டுக்கல் பழனிச்சாமி இருந்தார். இவர், சென்னைக்கு கடந்த மாதம் இடமாறுதல் செய்யப்பட்டார். இருவரும், துப்புரவுப் பணியாளர் மாத சம்பளம் செக் வழங்க, ஒவ்வொரு மாதமும், தனியார் துப்புரவு நிறுவனத்திடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கினர். இதை முன்னாள் கவுன்சிலரும், நுகர்பொருள் வாணிபக் கழக எழுத்தருமான மயில்வாகனன், நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார்.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், திருவாரூர் நகராட்சியை கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் அலுவலகத்தில் இருந்த சுகாதார அதிகாரி ராஜாவிடம், துப்புரவு தனியார் நிறுவன கான்ட்ராக்டர் மயில்வாகனன், பழனிச்சாமிக்கு சேரவேண்டிய ரூபாயும் சேர்த்து 3,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதை ராஜா வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ராஜாவிடம் இருந்த பணத்தை சோதனை செய்த போது, அதில் ரசாயன பவுடர் தடவியதும், ராஜா கைரேகையும் பதிவாகியிருந்தது. மயில்வாகனன் கொடுத்த புகாரின் பேரில், நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், திருவாரூர் நகராட்சி சுகாதார அதிகாரி ராஜா 2,000 ரூபாய், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து, திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ், லஞ்சம் வாங்கிய நகராட்சி அதிகாரியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக