
புதுடெல்லி, ஆக. 5
மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று பரிசீலனை செய்கிறது.
அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்களை காட்டிக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுவதுண்டு. சில சமயம் ஊழல் புரிந்தவர்களின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதும் உண்டு. இதனால் ஊழல் நடப்பது தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்த யாரும் முன்வருவதில்லை. இந்நிலையில் ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை காப்பாற்ற மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று டெல்லியில் கூடும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டப்படி ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய ஊழல் தடுப்பு கமிஷன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. காட்டிக் கொடுத்தவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் காட்டிக் கொடுத்தவர் பற்றிய விவரத்தை வெளியில் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி மீது இந்தச் சட்டப்படி நடவடிக்கை பாயும். அதே சமயம் ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்க நினைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் இடமுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நடப்பு கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
சில ஆண்டுகளுக்கு முன் தங்க நாற்கர சாலை திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறிய தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யேந்திர துபே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு ஊழலை காட்டிக் கொடுப்பவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சட்ட கமிஷனும் பரிந்துரை செய்ததை தொடர்ந்து இந்த மசோதா உருவாக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக