31 ஜனவரி 2010
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு: ரேஷன் அதிகாரிகளின் லஞ்ச வசூல் அம்பலம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தின்போது, ஊழியர்களிடமிருந்து சிவில் சப்ளை துறை அதிகாரிகள் பெருமளவில் லஞ்ச வசூல் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் சிக்கினர். கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடைபெறுவது வழக்கம். இக் கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி தலைமை தாங்குவார்.
அப்போது ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் வட்ட வழங்கல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் வட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் நடந்த சோதனையில் மட்டும் ரூ.35 ஆயிரம் கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருத்தணியில் கணக்கில் வராத ரூ.8750 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சந்தைப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து கணக்கில் வராத ரூ. 30 ஆயிரத்து 415 பறிமுதல் செய்தனர்.
பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடியாக கூட்ட வளாகத்துக்குள் நுழைந்த போது, லஞ்ச அதிகாரிகளும், ஊழியர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர்.
போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலூரில் 5 அதிகாரிகள் மற்றும் 15 ரேஷன் கடை ஊழியர்கள் உட்பட பலரும் சிக்கியுள்ளனர்.
லஞ்ச ஊழல் முறைகேடு குறித்து மீண்டும் புகார் வந்தால் இது போன்ற அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
லஞ்சம் வாங்கும் ஊழியருக்கு ஓய்வூதியம், சலுகை கிடைக்காது
லஞ்சம் வாங்கி தண்டிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் கிடைக்காது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் லஞ்ச ஊழலை அடியோடு ஒழிக்க முதல்வர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் எடுத்துள்ள கொள்கை முடிவின்படி, கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த்சிங் அண்மையில் எல்லா அரசுத்துறை தலைவர்கள், வாரியங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "அரசு ஊழியர் லஞ்சம் அல்லது சட்ட விரோதமான பரிசுகளை பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டால் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்கீழ் வழக்கு தொடரப்படும். சம்பந்தப்பட்ட நபர் பணியில் இருக்கும்போது நீதிமன்றடால் பணியில் இருந்து நீக்கப்படுவார்.
இது மட்டுமின்றி அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதரச் சலுகைகளும் ரத்து செய்யப்படும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் ஓய்வு பெற்றப் பிறகு தண்டிக்கப்பட்டால் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்படும்.’’
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யவும் .
மேலூரில் லஞ்சம் கொடுக்க வந்த 15 பேர் பிடிபட்டனர் .
மதுரை மாவட்டம் மேலூரில், ரேஷன் பொருட்களுக்கான கூட்டுறவு சார் பதிவாளர், ஆர்.ஐ., டி.எஸ்.ஓ., கிளார்க் போன்றவர்களுக்கு கொடுக்க, 39 ஆயிரத்து 415 ரூபாய் லஞ்ச பணத்துடன் வந்த, 15 ரேஷன் கடை ஊழியர்களை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
மேலூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று ஆய்வு நடத்தினர். மாதக் கடைசி நாளான நேற்று, மேலூர் தாலுகாவில் உள்ள 93 ரேஷன் கடை ஊழியர்களும், தாங்கள் செலுத்த வேண்டிய பணத்துடன் அங்கு வந்திருந்தனர்.
ரேஷன் கடைகளில் உள்ள கார்டுதாரர்களை பொறுத்து, ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அவர்கள், அதிகாரிகளுக்கு, அன்று லஞ்சமாக கொடுக்க வேண்டுமாம். லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் சிலர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர்.
ரேஷன் பொருட்களுக்கு செலுத்த வேண்டிய தொகை போக, எஞ்சிய பணம் குறித்து, ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில், கொங்கம்பட்டி ரேஷன் கடை ஊழியர் சந்திரசேகர், 23, 830 ரூபாய் அதிகம் வைத்திருந்தார். கச்சிராயன்பட்டி ஆண்டிச்சாமி 2,400 ரூபாயும், அம்பலகாரன்பட்டி மணிமுத்து 1,450 ரூபாயும் வைத்திருந்தனர். மேலும் 12 பேர், அதிகப் பணம் வைத்திருந்தனர்.
இவர்களிடமிருந்து, 39 ஆயிரத்து 415 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இப் பணத்தை கூட்டுறவு சார்பதிவாளர் ராஜ், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்செல்வி, மற்றும் இரண்டு கிளார்க்குகளுக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்ததாக, ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர்.
இவர்களிடம் வாக்குமூலம் பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
30 ஜனவரி 2010
லஞ்சம் கேட்டால் செல்போனில் (98409-83832) என்னிடம் புகார் செய்யலாம் : போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்
பொதுமக்களிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என் செல்போனில் புகார் செய்யலாம் என்றார்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கூறியதாவது: சென்னையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் வேட்டையில், போக்குவரத்து போலீசார் சிக்கியது குறித்த அறிக்கை, இன்னும் எனக்கு வரவில்லை. லஞ்சம் என்பது சமுதாயக் குற்றம். பொதுமக்கள் கொடுப்பதால் தான், போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். பிச்சைக்காரனிடம் பத்து முறை பணம் இல்லை எனத் தெரிவித்தால், அவன் மீண்டும் வரமாட்டான். அதேபோல, லஞ்சம் கேட்கும் போலீசாரிடமும் பணம் இல்லை எனக் கூறுங்கள்.
லஞ்சம் கொடுக்காவிட்டால், வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் கூறினால், எனது மொபைல் எண்ணில்(98409 83832) புகார் செய்யுங்கள்.
லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுனர்களிடம் ஸ்பாட் பைன் வசூலிக்காமல், விதிமீறல் குற்றப்பதிவு ரசீது மட்டும் வழங்கி, அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் செலுத்துவது குறித்து, கூடுதல் கமிஷனரிடம் பேசவுள்ளேன். எனவே, போலீஸ் நிலையங்களில் போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது உள்ள போலீசார் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
மனு கொடுக்க வருவோரிடம் சரமாரி லஞ்சம் - சீவலப்பேரி போலீஸார் கூண்டோடு மாற்றம்
நெல்லை: புகார் மனு அளிப்பவர்களிடம் சரமாரியாக லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் சீவலப்பேரி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் கூண்டோடு வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றப்பட்டனர்.
சீவலப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிப்பவரிடம் பணம் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்துவதாக எஸ்ஐக்கள் கோபாலகிருஷ்ணன், தங்கபாண்டியன், முருகன், ஏட்டுகள் கண்ணன், முருகன், அய்யனார், சிவசுப்பு, ஆறுமுகம் ஆகிய 8 பேர் மீது குற்றசாட்டு எழுந்தது.
இதையறிந்த நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதன் பேரில் எஸ்பி உத்தரவின் பேரில் எஸ்ஐக்கள் கோபால கிருஷ்ணன் சேர்ந்தமரத்திற்கும், தங்கபாண்டியன் வாசுதேவநல்லூருக்கும், முருகன் சொக்கம்பட்டிக்கும், ஏட்டுகள் கண்ணன் புளியங்குடிக்கும், முருகன் சங்கரன்கோவிலுக்கும், அய்யனார் தென்காசிக்கும், சிவசுப்பு கடையநல்லுருக்கும், ஆறுமுகம் பழவூருக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
29 ஜனவரி 2010
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி : இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் ஐவர் சிக்கினர்
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து எஸ்.ஐ.,க்கள் சிக்கினர். அவர்கள் முறைகேடாக வசூலித்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அபராதத் தொகை வசூலிப்பதாகவும், அபராதத் தொகை வசூலித்ததற்கு ரசீது வழங்காமலும் போக்குவரத்து போலீசார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமி உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாசுக்கரசு மற்றும் போலீசார் பல குழுக்களாக பிரிந்து நேற்றிரவு வடசென்னை, பூக்கடைபோக்குவரத்து பிரிவில் அதிரடி சோதனை நடத்தினர்.
பூக்கடை, சென்ட்ரல், பிராட்வே, ரத்தன் பஜார், ஈவ்னிங் பஜார் ஆகிய இடங்களில் இச்சோதனை நடந்தது. அப்போது போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளிடம் முறைகேடாக வசூலித்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணம் சிக்கியது.
பூக்கடை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணசாமி, ஸ்ரீதரன் பிள்ளை, அப்துல் மஜித், கொத்தாவல் சாவடி எஸ்.ஐ., ராமச்சந்திரன், வடசென்னை பறக்கும் படைப்பிரிவு எஸ்.ஐ., மூர்த்தி ஆகியோர் சிக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
லஞ்சம்: ஈஎஸ்ஐ ஆய்வாளர் உள்பட இருவர் கைது
திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், கோவிந்தராஜ், சம்பத் ஆகியோர் சேர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழவஞ்சிபாளையத்தில் பனியன் ஜாப்ஒர்க் நிறுவனத்தை ஆரம்பத்தினர். கடந்த மாதம் அந்நிறுவனத்தில் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக திருப்பூர் ஆய்வாளர் ஹர்பல்சிங்(43) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொழிலாளர்கள் சம்பந்தமான ஆவணங்களை முறைப்படி பராமரிக்காமல் இருந்தது குறித்து நிறுவன உரிமையாளர்களிடம் விசாரித்த அவர் இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
ஆனால், நிறுவன உரிமையாளர்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாததை அடுத்து அவர்களுக்குள் கடந்த ஒருமாதமாக பேரம் நடந்துள்ளது. இறுதியில் ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி கேட்டதை அடுத்து நிறுவன உரிமையாளர் கதிர்வேல் இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்புலான்வு பிரிவினருக்கு (சிபிஐ) தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் வகுத்துக்கொடுத்த திட்டப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ.5 ஆயிரம் பணத்துடன் கதிர்வேல் வியாழக்கிழமை கொங்கு மெயின் ரோட்டிலுள்ள ஈஎஸ்ஐ அலுவலகத்துக்குச் சென்றார்.ஆனால், ஹர்பல்சிங் அங்கு இல்லாததை அடுத்து செல்போனில் தொடர்பு கொண்டபோது தாராபுரம் சாலை புதூர் பிரிவிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆய்வுக்கு வந்துள்ளதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்கும்படியும் அவர் தெரிவித்தாராம். இதையடுத்து, அங்கு சென்ற கதிர்வேல் மற்றும் பங்குதாரர்களும், ஹர்பல்சிங் தெரிவித்தபடி அவரது உதவியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் அப்பணத்தை அளித்துள்ளனர்.
அப்போது வெளியில் மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் விரைந்து உள்ளே சென்று ஹர்பல்சிங் மற்றும் அவரது உதவியாளர் ராமச்சந்திரபிரபுவையும் பிடித்தனர். நீண்ட விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து கொங்கு மெயின் ரோட்டில் உள்ள ஈஎஸ்ஐ அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
தனியார் துறையிலும் ஊழல் !
துடில்லி : "இந்தியாவில், தனியார் துறையிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது; குறிப்பாக, அத் துறையில் உயர்மட்ட அளவில் ஊழல் அதிகரித்துள்ளது' என்று, ஓர் ஆய்வு கூறியுள்ளது. "சந்தைப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சிக் கழகம்' (எம்.டி.ஆர்.ஏ.,) என்ற அமைப்பால், டில்லி, நொய்டா, குர்கான், மும்பை, புனே, பெங்களூரு, கோல்கட்டா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில், தனியார் துறையில் வேலை பார்க்கும் 742 ஊழியர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது: தனியார் துறையில் ஊழல் புரையோடிப் போய்விட்டதாக, 86 சதவீதம் பேர் கருத்துக் கூறியுள்ளனர். குறிப்பாக, அத்துறையில், கீழ்மட்டத் தில் ஊழல் இருப்பதாக 83.4 சதவீதம் பேரும், மத்திய நிர்வாகத்தில் இருப்பதாக 88.1 சதவீதம் பேரும், உயர்மட்டத்தில் ஊழல் இருப்பதாக, 90.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். நிர்வாகத்தில் பணப் பரிமாற்ற ஊழல் இருப்பதாக 39.2 சதவீதம் பேரும், வேண்டப்பட்டவர்களுக்கு உறவினர்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்து 17.1 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
28 ஜனவரி 2010
ஒன்றரை லட்சம் லஞ்சம் , 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் , திருவெறும்பூர் ஏ.பி.டி.ஓ., லட்சுமி கைது .
திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகள் ஜான்சிராணி (27). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அதே ஊரில் செயல்படும் புனித வளவனார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
விண்ணப்பத்தை சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்த பள்ளி நிர்வாகம், அவருடைய நிலை கருதி சத்துணவு அமைப்பாளர் பணியை ஜான்சி ராணிக்கே வழங்குமாறு பரிந்துரை செய்தது.
இந்நிலையில், பணிநியமனம் தொடர்பாக திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) லட்சுமியை (47), ஜான்சிராணி கடந்த 27ம் தேதி சந்தித்தார். அப்போது லட்சுமி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் சத்துணவுஅமைப்பாளர் பணி கிடைக்கும் என்றுஜான்சிராணியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்பணமாக நாளையே 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் லட்சுமி வலியுறுத்தினார். ஏழ்மை காரணமாக தன்னால் பணம் கொடுக்க முடியாது என்ற கூறிவிட்டு ஜான்சிராணி வந்துவிட்டார்.இதற்கு புரோக்கராக பட்டாளப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் நாகலட்சுமி (50) இருந்தார்.
இதுகுறித்து ஜான்சிராணி நேற்று காலை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று மதியம் ஜான்சிராணி 10 ஆயிரம் பணத்துடன் திருவெறும்பூர் யூனியன் அலுவலகம் சென்று ஏ.பி.டி.ஓ., லட்சுமியை சந்தித்து பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பெற்றுக்கொண்ட லட்சுமியையும், அதற்கு உதவியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் நாகலட்சுமியையும் கையும், களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
பின்னர் திருச்சி குற்றவியல் தலைமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
தர்கா புனரமைக்க லஞ்சம் , வக்பு வாரிய அதிகாரி கைது
வேலூர் மாவட்டத்தில் தர்கா ஒன்றினை புனரமைக்க லஞ்சம் வாங்கிய வக்பு வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரில் உள்ள தர்காவில் செயலாளராக இருப்பவர் குலாப்கான். தர்காவுக்கு சொந்தமான காலியிடத்தில் கழிப்பறை கட்டவும், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் ரூ.2 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்து அதற்கான அங்கீகாரத்துக்காக வக்பு வாரிய வேலூர் அலுவலக கண்காணிப்பாளர் பாபு நவாப்கானை அணுகினார்.
அங்கீகாரம் அளித்து பணிகளை தொடங்க அனுமதிக்க தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று நவாப்கான் கேட்டுள்ளார். ரூ.3 ஆயிரத்தை கடந்த 15&ம் தேதி குலாப்கான் கொடுத்துள்ளார். மீதி 2 ஆயிரத்தையும் தந்தால்தான் பணிக்கான அங்கீகாரம் தர முடியும் என்று நவாப்கான் கூறியுள்ளார்.
இதுபற்றி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் குலாப்கான் புகார் செய்தார். அவர்களது அறிவுரைப்படி, குலாப்கான் நேற்று மாலை ரூ.2 ஆயிரத்தை வேலூர் காந்தி ரோடு வக்பு வாரிய அலுவலகத்தில் இருந்த பாபு நவாப்கானிடம் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் பாபு நவாப்கானை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 ஜனவரி 2010
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு : கணக்கில் காட்டாத ரூ. 19 ஆயிரம் சிக்கியது
கோயமுத்தூர் : பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 19 ஆயிரத்து 250 ரூபாய் கைப்பற்றப்பட்டது. சார் பதிவாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.நேற்று இரவு பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கான கட்டணங்களை போலீசார் சோதனை செய்தனர்.
தற்காலிக சார் பதிவாளராக பணியாற்றும் சகுந்தலா என்பவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 12 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல, இளநிலை உதவியாளர் விஜயலட்சுமியிடம் 1,700 ரூபாய், அலுவலக உதவியாளர் தியாகராஜனிடம் 1,650 ரூபாய், பதிவு அறையில் இருந்து 3,900 ரூபாய் என, மொத்தம் 19 ஆயிரத்து 250 ரூபாய் கைப்பற்றப்பட்டது.சார் பதிவாளர் சகுந்தலா, விஜயலட்சுமி, தியாகராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். "இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.
கேட்பாரற்று கிடந்த பணம்: நேற்று மாலை 5.00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் எட்டு பேர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். முதலில் அலுவலர்கள் உட்கார்ந்து இருந்த மேஜை டிராயரில் சோதனை நடத்தினர்.
அங்கு கணக்கு காட்டப்படாத தொகையை கைப்பற்றியவுடன், ஆவண அறையில் சோதனை நடத்தினர். அறையின் உட்பகுதியில் 3,900 ரூபாய் தரையில் கிடந்தது. இந்த பணத்துக்கான உரிமையை யாரும் கோரவில்லை. லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்துவது தெரிந்தவுடன் சார் பதிவாளர் அலுவலகத்தை சுற்றி இருந்த சில பத்திரம் எழுதும் அலுவலகங்கள் அவசர, அவசரமாக பூட்டப்பட்டன. .
25 ஜனவரி 2010
திருமணம் செய்யவும் லஞ்சம் , ஒரே நாளில் 4 பேர் பிடிபட்டனர்
திண்டுக்கல்லில் ரூ. 700 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே இருக்கும் கோட்டூரில் வி.ஏ.ஓ., வாக இருப்பவர் சுப்புராஜ். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கலப்பு திருமணத்துக்கான ஜாதிச் சான்றிதழ் வழங்க ரூ. 700 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் வி.ஏ.ஓ., சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.
___________________________________________________________________
திருமண உதவித் தொகை பெறுவதற்காக சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நேற்றிரவு மேலூரில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் கிடாரிபட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் சித்ரா. இவருக்கும் சென்னகரம்பட்டியை சேர்ந்த சேவுகப் பெருமாளுக்கும் ஜன. 27ல் மேலூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமமிர்த அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் பெற சித்ரா குடும்பத்தார் முடிவு செய்தனர். சித்ராவின் சகோதரர் செந்தில்குமார்(31) கிடாரிபட்டி வி.ஏ.ஓ., மலைச்சாமி(55)யிடம் வருமானச் சான்று, இருப்பிட சான்று, திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பம் ஆகியவற்றில் கையெழுத்து கேட்டுள்ளார். இதற்கு மலைச்சாமி 1500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.100 ரூபாயை முன்பணமாக கொடுத்த செந்தில்குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இன்று இரவு மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மீதி 1400 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிய வி.ஏ.ஓ., தனக்கு 900 ரூபாய் போதும் என்று கூறி, 500 ரூபாயை செந்தில் குமாரிடம் திருப்பி தந்துள்ளார்
__________________________________________________________________________
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் திருமண நிதி உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இரண்டு பெண் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. ராஜேஷ் திருமண நிதி உதவி கோரி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ரேவதியிடம் (57) விண்ணப்பித்தார். ரேவதி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். பேரம் பேசி 1,000 ரூபாய் தர ராஜேஷ் சம்மதித்தார். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயனக் கலவை தடவிய 1,000 ரூபாயை, ரேவதியிடம் ராஜேஷ் கொடுத்தார். மறைந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர், ரேவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊர்நல அலுவலர் பழனியம்மாளை (52) கையும், களவுமாக பிடித்தனர். அவர்களிடம், கணக்கில் வராத 4,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் - கோட்டூர் வி.ஏ.ஓ , சுப்புராஜ் கைது
லஞ்ச பணத்தை விழுங்கிய விஏஓ : விரலை விட்டு எடுத்தது போலீஸ்
நிலக்கோட்டை: கலப்பு திருமண நிதியுதவிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ, லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும், பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்தார். ஆனால், போலீசார் அவரை விழுங்க விடாமல் பணத்தை எடுத்து, அவரை கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் விஏஓவாக இருப்பவர் சுப்புராஜ். பொன்முனியாண்டியை மூன்று மாதங்களாக அலையவிட்ட சுப்புராஜ், ரூ.1000 லஞ்சம் கேட்டார். ரூ.700 தருவதாக பொன்முனியாண்டி கூறினார். பின்னர், பொன்முனியாண்டி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி நேற்று கோட்டூர் விஏஓ அலுவலகம் வந்த பொன்முனியாண்டி, ரசாயனம் தடவிய ரூ.700ஐ சுப்புராஜிடம் கொடுத்தார்.
பணத்தை வாங்கி பாக்கெட்டில் வைக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் மற்றும் போலீசார் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சுப்புராஜ் அதிர்ச்சியடைந்தார். திடீரென பணத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். சுதாரித்த போலீசார் அப்படியே அவர் வாயை அமுக்கி வாயில் இருந்த பணத்தை விரல் விட்டு எடுத்தனர். அதன் பிறகு சுப்புராஜை கைது செய்தனர்.
சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய கிடாரிபட்டி வி.ஏ.ஓ., மலைச்சாமி கைது
திருமண உதவித் தொகை பெறுவதற்காக சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நேற்றிரவு மேலூரில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் கிடாரிபட்டியை சேர்ந்தவர் வெள்ளையன் மகள் சித்ரா. இவருக்கும் சென்னகரம்பட்டியை சேர்ந்த சேவுகப் பெருமாளுக்கும் ஜன. 27ல் மேலூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமமிர்த அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் ரூபாய் பெற சித்ரா குடும்பத்தார் முடிவு செய்தனர்.
சித்ராவின் சகோதரர் செந்தில்குமார்(31) கிடாரிபட்டி வி.ஏ.ஓ., மலைச்சாமி(55)யிடம் வருமானச் சான்று, இருப்பிட சான்று, திருமண உதவித் தொகைக்கான விண்ணப்பம் ஆகியவற்றில் கையெழுத்து கேட்டுள்ளார். இதற்கு மலைச்சாமி 1500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.100 ரூபாயை முன்பணமாக கொடுத்த செந்தில்குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். இன்று இரவு மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மீதி 1400 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணத்தை வாங்கிய வி.ஏ.ஓ., தனக்கு 900 ரூபாய் போதும் என்று கூறி, 500 ரூபாயை செந்தில் குமாரிடம் திருப்பி தந்துள்ளார்.
மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைக்கு லஞ்சம்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் திருமண நிதி உதவித் தொகை வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, இரண்டு பெண் ஊழியர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சண்முகப்பிரியா. ராஜேஷ் திருமண நிதி உதவி கோரி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ரேவதியிடம் (57) விண்ணப்பித்தார். ரேவதி 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
பேரம் பேசி 1,000 ரூபாய் தர ராஜேஷ் சம்மதித்தார். அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ரசாயனக் கலவை தடவிய 1,000 ரூபாயை, ரேவதியிடம் ராஜேஷ் கொடுத்தார். மறைந்திருந்த இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர், ரேவதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஊர்நல அலுவலர் பழனியம்மாளை (52) கையும், களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம், கணக்கில் வராத 4,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
24 ஜனவரி 2010
லஞ்சத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி .
சென்னை : ஐந்தாவது தூண் சார்பில் "ஊழல் தடுப்பு மற்றும் தகவல் பெறும் உரிமை சட்டம் சேவையை' வலியுறுத்தி, மெரீனா கடற்கரையில் நேற்று மனிதச் சங்கிலி நடைபெற்றது. மனிதச் சங்கிலியை, லயன்ஸ் கிளப் கவர்னர் மணிலால் துவக்கி வைத்தார். சென்னை விமான நிலைய முன்னாள் இயக்குனர் கே.நடராஜன் தலைமை வகித்தார். ஐந்தாவது தூண் ஊழல் தடுப்பு துறையின் இயக்குனர் ஆர்.வி.நம்பி, ஐந்தாவது தூண் தலைவர் விஜய் ஆனந்த், செயல்பாடு துறையின் இயக்குனர்கள் சுப்பிரமணி, பானு ஆகியோர் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கைகோர்த்து நின்றபடி கலந்து கொண்டனர்.
ஜீரோ ரூபாய் அட்டை பேனரில், "நான் லஞ்சம் வாங்க மாட்டேன்; கொடுக்கவும் மாட்டேன்' என, பொதுமக்கள் கையெழுத்திட்டனர். நேர்மை என்ற பந்தை தழுவி, லஞ்சம் என்ற பந்தை உதைத்துக் காட்டும் நிகழ்ச்சியையும் கடற்கரையில் மாணவ, மாணவர்கள் நடத்திக் காட்டினர்.
"லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும். நலிந்து கொண்டிருக்கும் தகவல் பெறும் உரிமை ஆணையத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். தகவல் பெறும் உரிமை ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படுவதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்' ஆகிய கோரிக்கைகள் மனிதச் சங்கிலியில் வலியுறுத்தப்பட்டன. லஞ்ச ஒழிப்புக்கு எதிரான பேனர்கள் கடற்கரையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
22 ஜனவரி 2010
மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஏராளமான பணம் சிக்கியது .
மதுரை மாட்டுத்தாவணி வடக்கு, கே.கே.நகர் மத்திய வட்டார போக்குவரத்து( ஆர்.டி.ஓ.,) அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி, புரோக்கர்களிடம் இருந்த 41 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும், மறைத்து வைத்திருந்த லஞ்ச பணத்தை ஊழியர்கள் வீசி எறிந்தனர்.
நேற்று மாலை 5.40 முதல் இரவு 8 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
மதுரை மத்திய ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் போலீசார் நுழைந்தபோது, பதிவேடுகளில் மறைத்து வைத்திருந்த 10 ஆயிரத்து 710 ரூபாய் லஞ்ச பணத்தை, ஊழியர்கள் தூக்கி எறிந்தனர். புதூரை சேர்ந்த புரோக்கர் முகமதுவிடம் (35) கணக்கில் வராத பணம் 20 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது.விசாரணையில் அவர், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன புதுப்பித்தலுக்காக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், அமிர்தீஸ்வரனிடம் லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்தாக தெரிவித்தார்.
வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் எழுத்தர் அமலி மற்றும் ஊழியர்கள், போலீசாரை கண்டதும் மேஜை, ஆவணம் மற்றும் பைகளில் மறைத்து வைத்திருந்த பணத்தை கீழே வீசி எறிந்தனர். புரோக்கர்கள் மேலூர் அப்துல் ரகுமான், வடுகபட்டி ரமேஷ், நரிமேடு செந்தில்குமாரிடம் கணக்கில் வராத 5,290 ரூபாய், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன புதுப்பித்தலுக்கான ஆவணங்கள் இருந்தன. புரோக்கர்கள் சுவாமி, முருகன், மனோஜ் கண்ணனிடம் கணக்கில் வராத பணம் 1,880 ரூபாய் இருந்தது. இங்கு 10 ஆயிரத்து 290, மத்திய அலுவலகத்தில் 31 ஆயிரத்து 210, மொத்தம் 41 ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புரோக்கர்கள் முகமது, அப்துல்ரகுமான், ரமேஷ், செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். மற்ற மூன்று புரோக்கர்களிடம் ஆவணங்கள் இல்லாததால், எச்சரித்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க போலீசார் முடிவு செய்தனர்.
திருப்பூர் சார்பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு'
திருப்பூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் -2ல் நேற்று திடீரென கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் "ரெய்டு' நடத்தினர்; கணக்கில் வராத 7,050 ரூபாயை பறிமுதல் செய்து, மூன்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில், சார்பதிவாளர் அலுவலகம் -2 உள்ளது. இந்த அலுவலகத்துக்குள், கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஏழு போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து "ரெய்டு' நடத்தினர்.
அங்குள்ள, கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்தனர். கணக்கில் வராத 7,050 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அந்த அலுவலகத்தில் பணியில் இருந்த இளநிலை உதவியாளர், உதவியாளர், வாட்ச்மேன் மூவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.
கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
லஞ்ச வழக்கில் கனரா வங்கி மேலாளர் கைது .
வேதாரண்யம் - கனரா வங்கியின் குரவுபுலம் கிளை மேலாளர் பூமி குமாரனை சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
வீரமணி எனும் விவசாயிக்கு பயிர் கடன் வழங்குவதற்கு இவர் ரூ.5,000 ம் கையூட்டு கேட்டதைத் தொடர்ந்து புகார் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வலை விரித்து அவர் லஞ்சம் பெறும் போது கையும களவுமாகப் பிடித்தனர்.
20 ஜனவரி 2010
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,சஸ்பெண்ட்! எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய லஞ்சம் !
திருப்பூரை சேர்ந்தவர் ஆலம்பாஷா. இவர் வெளிநாட்டுக்கு பனியன் ஏற்றுமதி செய்கிறார். கடந்த டிசம்பர் 30ம் தேதி, திருப்பூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு தார்பாய் மூடப்பட்ட ஒரு லாரியில் 960 பெட்டிகளில் பனியன் அனுப்பி வைத்தார். லாரி அம்பத்தூர் அருகே வந்தபோது, தார்பாய் கிழிந்திருப்பதை டிரைவர் கவனித்தார். பனியன் இருந்த 135 பெட்டிகளை காணவில்லை. இதுகுறித்து உரிமையாளர் ஆலம்பாஷா மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், எல்லை பிரச்னை காரணம் காட்டி புகார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரும் ஏற்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த ஆலம்பாஷா, புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அதை, அம்பத்தூர் போலீசார் விசாரிக்க ஜனவரி 3ம் தேதி ஜாங்கிட் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் நெடுமாறன், சப் இன்பெக்டர் பகவத்சிங் இருவரும் அந்த புகாரை ஏற்றனர். காணாமல் போன பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம். எங்களுக்கு ரூ.81 ஆயிரம் தந்தால்தான் எப்.ஐ.ஆர்.பதிவு செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆலம்பாஷா ரூ.81 ஆயிரம் கொடுத்த பிறகே எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீண்டும் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஆலம்பாஷா புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து ஜாங்கிட் உத்தரவிட்டார். ஆலம்பாஷாவிடம் பெற்ற ரூ.81 ஆயிரத்தில் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் ரூ.75 ஆயிரம், எஸ்ஐ பகவத்சிங் ரூ.6 ஆயிரம் என பங்குபோட்டுக் கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஜாங்கிட் நேற்று உத்தரவிட்டார்.
19 ஜனவரி 2010
சிவகங்கை உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பையா கைது .
சிவகங்கையில் ரூ. 1000 லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய உதவிதொடக்க கல்வி அலுவலராக இருப்பவர் சுப்பையா.
அதே ஒன்றியத்திற்க்குட்பட்ட கோணம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிபவர் செல்வமணி. இவரிடம் கடந்த ஆகஸ்ட்- டிசம்பர் மாதத்திற்கான 6வது ஊதியகுழு பரிந்துரைப்படி சம்பள பில்லை அளிப்பதற்காக சுப்பையா ரூ. 1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து செல்வமணி லஞ்சபணத்தை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் கலெக்டரின் பி.ஏ, தாவூத் , எழுத்தர் மதியழகன் கைது.
தாவூத்
பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக மணிவேலு (56). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சென்றார். அந்த நேரம் கலெக்டரின் பி.ஏ., ரெய்டுக்கு வந்துள்ளார். மணிவேலு பணி நேரத்தில் அங்கு இல்லாததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தன்னை மீண்டும் பணியில் சேர்க்க கோரி கலெக்டர் பி.ஏ., தாவூத்தை அணுகியுள்ளார். அப்போது தாவூத் லஞ்சமாக ரூ. 5000 கேட்டுள்ளார். மேலும் எழுத்தர் மதியழகனுக்கு ரூ.1000 லஞ்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிவேலு புகார் கொடுத்தார். இன்று மணிவேலு தாவூத்திடம் லஞ்சம் கொடுக்க சென்றார். அப்போது மறைந்திருந்த போலீசார் 2 அதிகாரிகளையும் கைது செய்தனர்.
ஜே.பி.ஜே. நிறுவனர் கோர்ட்டில் ஆஜர்
பொதுமக்களுக்கு நிலம் தருவதாக கூறி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படும் ஜஸ்டின் தேவதாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
.
பாளையங்கோட்டையை சேர்ந்த ஜஸ்டின் தேவதாஸ் என்பவர் சென்னை அண்ணாநகரில் ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்தார். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை தருவதாக கூறி பொது மக்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அவர் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் பொதுமக்களிடம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை போலீசார் தேடி வந்தனர். பெங்களூரில் கடந்த மாதம் 4ந் தேதி அவர் ஆயுதப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவர் இன்று எழும்பூரில் உள்ள முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கைகளில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வழக்கில் காலை 10 மணிக்கு அவர் ஆஜராவதற்காக அழைத்து வரப்பட்டார். ஆனால் 12.30 மணி வரையிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் தேவதாஸ், தாம் ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுவதை மறுத்தார். தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ.28 கோடி வரையிலேயே தாம் சம்பாதித்ததாகவும், ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுவது தவறு என்று தெரிவித்தார்.
மேலும் 10 மணிக்கு ஆஜர்படுத்துவதாக போலீசார் அழைத்து வந்து தாமதப்படுத்துவதாக அவர் குறை கூறினார். பெங்களூர் சிறையில் தான் 2வது மாடியில் வைக்கப் பட்டிருந்ததாகவும் அங்கு கால் தவறி விழுந்து தனக்கு கையில் அடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
17 ஜனவரி 2010
வங்கி செயலருக்கு 18 ஆண்டுகள் சிறை
கூட்டுறவு வங்கிச் செயலருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). அதே ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1995-96ம் ஆண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, சர்க்கரை, மண்ணெண்ணெய் குறைவு, சம்பள பணத்தில் கையாடல், ரசீது இல்லாத செலவு கணக்குகள், பொய் கணக்கு எழுதி பண மோசடி உள்ளிட்ட எட்டு குற்றங்கள் தெரியவந்தது.
கூட்டுறவுத் துறை மாவட்ட துணை பதிவாளர் அளித்த புகாரை அடுத்து, வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவினர், ராஜேந்திரன் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ராஜேந்திரன் மீதான ஏழு குற்ற பிரிவுகளுக்கு, தலா இரண்டரை ஆண்டும், ஒரு குற்ற பிரிவுக்கு ஒரு ஆண்டும் சிறைத் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் சுந்தரராஜன், நேற்று மாலை தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை 29 ஆயிரம் ரூபாய் செலுத்தவும், அதனை கட்டத் தவறினால் கூடுதலாக 29 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் சுந்தரராஜன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
15 ஜனவரி 2010
லஞ்சம் : கரைசுத்துபுதூர் VAO ஜெயபாலன் கைது
நெல்லை: பட்டா மாற்றுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் ரவி ஆபிரகாம். நிலக்கிழார். இவரது மனைவி சீதாவின் பெயரில் நெல்லை மாவட்டம் ஆற்றாங்கரை பள்ளிவாசல் பகுதியில் 24 ஏக்கர் நிலம் உள்ளது.
கூட்டுப்பட்டாவில் உள்ள இந்த நிலத்தை சீதாவின் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு ரவி ஆபிரகாம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்து அனுப்பும்படி கரைசுத்துபுதூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலனுக்கு தாசில்தார் உத்தரவிட்டார்.
கூட்டு பட்டாவில் அஸ்ரம் அலி என்பவரது பெயர் இடம் பெற்று இருப்பதாகவும் அவரது பெயரை நீக்கி தனி பட்டா வழங்குவதற்கு ரூ.1 லஞ்சம் தர வேண்டுமென ஜெயபாலன் ரவி ஆபிரகாமிடம் கேட்டுள்ளார்.
மேலும் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், பட்டா வழங்கிய பிறகு மீதி தொகையையும் கொடுக்க வேண்டும் என்றார். இந்த தொகையை அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரத்தில் உள்ள தனது வீட்டில் கொண்டு வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து ரவி ஆபிரகாம் நெல்லை மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். ஜெயபாலன் சொன்படி செய்யுமாறு கூறிவிட்டு போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்தனர்.
அதன்படி ரவி ஆபிரகாம் ஜெயபாலனிடம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த போலீசார் அவரை கையும்களவுமாக பிடித்தனர்.
ஜெயபாலன் நெல்லை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
வங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீடு போன்றவற்றை யாரிடமும் கொடுத்து உள்ளீர்களா ? நீங்கள் எந்த நேரமும் ஜெயிலுக்கு போக தயாராக இருங்கள் !
வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, ஒருவரது வங்கிக் கணக்கை முறைகேடாக பயன்படுத்தி ரூ.26 லட்சம் சுருட்டிய வெளிநாட்டு ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் சலாவுதீன். இரும்பு வியாபாரி. இவரது வங்கிக் கணக்கில் இருந்து மர்மமான முறையில் ரூ.26.55 லட்சம் சுருட்டப்பட்டது. இன்டர்நெட் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்யும்போது கவனக்குறைவாக ரகசிய குறியீட்டு எண்ணை, லாக் செய்யாமல் விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனாவிடம் சலாவுதீன் புகார் செய்தார். ஐ.ஜி. மகேந்திரன், டிஐஜி வெங்கட்ராமன் மேற்பார்வையில் எஸ்.பி. மல்லிகா, டிஎஸ்பி பாலு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். சலாவுதீன் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் பெயருக்கு பணம் மாற்றப்பட்டிருந்தது. இதில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது வங்கிக் கணக்குக்கு ரூ.4 லட்சம் மாற்றப்பட்டிருந்தது. போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரை தீவிரமாக விசாரித்தனர்.
‘‘வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் அறிமுகமானார். தற்காலிகமாக எனது வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்வதாக கூறினார். பணத்தை போட்டு பின்னர் எடுத்துக் கொள்வதற்காக 10 சதவீதம் கமிஷன் கொடுத்தார்’’ என்று கூறினார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மோசடி செய்த நபர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சலாவுதீனின் பணம் வேறு 3 பேரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டிருப்பதால் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று சிலருக்கு எஸ்எம்எஸ் வருகிறது. இதற்கு பதில் மெசேஜ் அனுப்புபவர் அல்லது விசாரிப்பவர்களிடம், ‘ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் மாற்ற வேண்டும். இதற்காக தற்காலிகமாக உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்கிறோம். வங்கி கணக்கு எண்ணை மட்டும் சொல்லுங்கள். 10 சதவீதம் கமிஷன் கிடைக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.
மோசடி பணத்தை இந்த கணக்கில் போட்டு எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிவிடுகிறார்கள். கமிஷனுக்கு ஆசைப்படுபவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். தற்போதும் இதுபோன்ற மோசடியே நடந்துள்ளது. வங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீடு போன்றவற்றை யாரிடமும் கொடுத்து ஏமாறக் கூடாது. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.