திருப்பூரை சேர்ந்தவர் ஆலம்பாஷா. இவர் வெளிநாட்டுக்கு பனியன் ஏற்றுமதி செய்கிறார். கடந்த டிசம்பர் 30ம் தேதி, திருப்பூரில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு தார்பாய் மூடப்பட்ட ஒரு லாரியில் 960 பெட்டிகளில் பனியன் அனுப்பி வைத்தார். லாரி அம்பத்தூர் அருகே வந்தபோது, தார்பாய் கிழிந்திருப்பதை டிரைவர் கவனித்தார். பனியன் இருந்த 135 பெட்டிகளை காணவில்லை. இதுகுறித்து உரிமையாளர் ஆலம்பாஷா மாதவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், எல்லை பிரச்னை காரணம் காட்டி புகார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அதைத்தொடர்ந்து, அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரும் ஏற்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த ஆலம்பாஷா, புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அதை, அம்பத்தூர் போலீசார் விசாரிக்க ஜனவரி 3ம் தேதி ஜாங்கிட் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் நெடுமாறன், சப் இன்பெக்டர் பகவத்சிங் இருவரும் அந்த புகாரை ஏற்றனர். காணாமல் போன பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம். எங்களுக்கு ரூ.81 ஆயிரம் தந்தால்தான் எப்.ஐ.ஆர்.பதிவு செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆலம்பாஷா ரூ.81 ஆயிரம் கொடுத்த பிறகே எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மீண்டும் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஆலம்பாஷா புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து ஜாங்கிட் உத்தரவிட்டார். ஆலம்பாஷாவிடம் பெற்ற ரூ.81 ஆயிரத்தில் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் ரூ.75 ஆயிரம், எஸ்ஐ பகவத்சிங் ரூ.6 ஆயிரம் என பங்குபோட்டுக் கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து ஜாங்கிட் நேற்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக