பொதுமக்களுக்கு நிலம் தருவதாக கூறி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படும் ஜஸ்டின் தேவதாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
.
பாளையங்கோட்டையை சேர்ந்த ஜஸ்டின் தேவதாஸ் என்பவர் சென்னை அண்ணாநகரில் ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்தார். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை தருவதாக கூறி பொது மக்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை அவர் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் பொதுமக்களிடம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை போலீசார் தேடி வந்தனர். பெங்களூரில் கடந்த மாதம் 4ந் தேதி அவர் ஆயுதப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவர் இன்று எழும்பூரில் உள்ள முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கைகளில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வழக்கில் காலை 10 மணிக்கு அவர் ஆஜராவதற்காக அழைத்து வரப்பட்டார். ஆனால் 12.30 மணி வரையிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோர்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் தேவதாஸ், தாம் ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுவதை மறுத்தார். தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ.28 கோடி வரையிலேயே தாம் சம்பாதித்ததாகவும், ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுவது தவறு என்று தெரிவித்தார்.
மேலும் 10 மணிக்கு ஆஜர்படுத்துவதாக போலீசார் அழைத்து வந்து தாமதப்படுத்துவதாக அவர் குறை கூறினார். பெங்களூர் சிறையில் தான் 2வது மாடியில் வைக்கப் பட்டிருந்ததாகவும் அங்கு கால் தவறி விழுந்து தனக்கு கையில் அடிபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக