புதியவை :

Grab the widget  Tech Dreams

15 ஜனவரி 2010

வங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீடு போன்றவற்றை யாரிடமும் கொடுத்து உள்ளீர்களா ? நீங்கள் எந்த நேரமும் ஜெயிலுக்கு போக தயாராக இருங்கள் !


வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, ஒருவரது வங்கிக் கணக்கை முறைகேடாக பயன்படுத்தி ரூ.26 லட்சம் சுருட்டிய வெளிநாட்டு ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் சலாவுதீன். இரும்பு வியாபாரி. இவரது வங்கிக் கணக்கில் இருந்து மர்மமான முறையில் ரூ.26.55 லட்சம் சுருட்டப்பட்டது. இன்டர்நெட் மூலம் வங்கி பரிவர்த்தனை செய்யும்போது கவனக்குறைவாக ரகசிய குறியீட்டு எண்ணை, லாக் செய்யாமல் விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனாவிடம் சலாவுதீன் புகார் செய்தார். ஐ.ஜி. மகேந்திரன், டிஐஜி வெங்கட்ராமன் மேற்பார்வையில் எஸ்.பி. மல்லிகா, டிஎஸ்பி பாலு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். சலாவுதீன் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் பெயருக்கு பணம் மாற்றப்பட்டிருந்தது. இதில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது வங்கிக் கணக்குக்கு ரூ.4 லட்சம் மாற்றப்பட்டிருந்தது. போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரை தீவிரமாக விசாரித்தனர்.

‘‘வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் அறிமுகமானார். தற்காலிகமாக எனது வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்வதாக கூறினார். பணத்தை போட்டு பின்னர் எடுத்துக் கொள்வதற்காக 10 சதவீதம் கமிஷன் கொடுத்தார்’’ என்று கூறினார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மோசடி செய்த நபர் யார், எந்த நாட்டை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சலாவுதீனின் பணம் வேறு 3 பேரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டிருப்பதால் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று சிலருக்கு எஸ்எம்எஸ் வருகிறது. இதற்கு பதில் மெசேஜ் அனுப்புபவர் அல்லது விசாரிப்பவர்களிடம், ‘ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் மாற்ற வேண்டும். இதற்காக தற்காலிகமாக உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்கிறோம். வங்கி கணக்கு எண்ணை மட்டும் சொல்லுங்கள். 10 சதவீதம் கமிஷன் கிடைக்கும்’ என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள்.

மோசடி பணத்தை இந்த கணக்கில் போட்டு எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிவிடுகிறார்கள். கமிஷனுக்கு ஆசைப்படுபவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். தற்போதும் இதுபோன்ற மோசடியே நடந்துள்ளது. வங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீடு போன்றவற்றை யாரிடமும் கொடுத்து ஏமாறக் கூடாது. இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக