ஊட்டி: பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டில் இரு உதவி செயற்பொறியாளர்கள் சிக்கினர்; அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. பேரூராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு இந்த அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் கையெழுத்திட்ட பின்னர் வட் டார வளர்ச்சி அலுவலர் மூலம் காசோலை வழங்கப்படும். இந்நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளுக்கான தொகையை வழங்க உதவி பொறியாளருக்கு இரண்டு சதவீதம், உதவி செயற் பொறியாளர் "ஸ்குயருக்கு' மூன்று சதவீதம் கமிஷன் பெறப் படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் திடீர் "ரெய்டு' நடத்தினர்.
இதில் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்ற இரு உதவி செயற்பொறியாளர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட் டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு டி.எஸ்.பி., பெரோஸ்கான் கூறியதாவது; பேரூராட்சிகளின் உதவி இயக் குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்க கமிஷன் பெறப்படுவதாக எங்களுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் இன்று திடீர் ஆய்வு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இந்த அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஸ்குயராக பணியாற்றும் நடேசன் மற்றும் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து கடந்த மாதம் துடியலூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ரங்கபோஜூ ஆகியோர் சிக்கினர்.
ரங்கபோஜூ துடியலூருக்கு மாற்றம் ஆன பிறகு, அவர் காலத்தில் நடந்த பணிகளுக்கு பில்கள் வழங்க ரங்கபோஜூ மற்றும் நடேசன் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டுள்ளனர். இன்று நடந்த ஆய்வில் இருவரிடமும் 30 ஆயிரம் ரூபாய் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகை எப்படி அவர்களிடம் வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு, பெரோஸ்கான் கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் நெடுஞ்சாலைத்துறையில் ரெய்டு நடத்தினர். நேற்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு போலீசார் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருவது அரசு அலுவலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் அதிகமாக தங்கள் பணிகளுக்கு நாடும் அலுவலகங்களில் ரெய்டு நடக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக