31 ஜனவரி 2010
தமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு: ரேஷன் அதிகாரிகளின் லஞ்ச வசூல் அம்பலம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தின்போது, ஊழியர்களிடமிருந்து சிவில் சப்ளை துறை அதிகாரிகள் பெருமளவில் லஞ்ச வசூல் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் சிக்கினர். கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் நடைபெறுவது வழக்கம். இக் கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி தலைமை தாங்குவார்.
அப்போது ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் வட்ட வழங்கல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் வட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் நடந்த சோதனையில் மட்டும் ரூ.35 ஆயிரம் கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருத்தணியில் கணக்கில் வராத ரூ.8750 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சந்தைப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து கணக்கில் வராத ரூ. 30 ஆயிரத்து 415 பறிமுதல் செய்தனர்.
பல இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடியாக கூட்ட வளாகத்துக்குள் நுழைந்த போது, லஞ்ச அதிகாரிகளும், ஊழியர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர்.
போலீசார் அவர்களை விரட்டிப்பிடித்து கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலூரில் 5 அதிகாரிகள் மற்றும் 15 ரேஷன் கடை ஊழியர்கள் உட்பட பலரும் சிக்கியுள்ளனர்.
லஞ்ச ஊழல் முறைகேடு குறித்து மீண்டும் புகார் வந்தால் இது போன்ற அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடரும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக