புதியவை :

Grab the widget  Tech Dreams

30 ஜூலை 2009

வீட்டு வரி வசூலிக்க ரூ. 3,000 லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது

சென்னை: ஆட்டோ டிரைவரிடம் வீட்டு வரி வசூலிக்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி, "பில் கலெக்டர்' கைது செய்யப்பட்டார்.சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பகுதியில் வசித்துவரும் ஆட்டோ டிரைவர் சங்கர். இவரது மைத்துனர் சீனிவாசன், பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீடு, பெரம்பூர் சுப்ரமணியபாரதி தெருவில் உள்ளது.மைத்துனரின் வீட்டிற்கு சொத்து வரி செலுத்த, பெரம்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சங்கர் சென்றார். மூன்றாவது மண்டலம் 34வது வார்டு சொத்து வரி அலுவலக, "பில் கலெக்டர்' இமானுவேல் தேவபிரசாத்தை (40) அணுகினார்."உங்கள் மைத்துனரின் வீட்டிற்கு சொத்து வரி குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் வரி செலுத்த வேண்டும். குறைவாக வரி ரசீது போட்டுத்தர 3,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' எனக் கூறியுள்ளார்.இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.,கள் நடராஜன், திருநாவுக்கரசு ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் புகார் கொடுத்தார். ரசாயன கலவை தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரவரதன், குமரகுருபரன், அமல்ராஜ், லட்சுமிகாந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. லஞ்ச பணத்தை வாங்கிய "பில் கலெக்டர்' இமானுவேல் தேவபிரசாத்தை கைது செய்தனர்.சாதாரண உடையில் இருந்த விஜிலென்ஸ் போலீசாரை திசை திருப்ப, "என்னை யாரோ கொலை செய்ய வந்துள்ளனர்' என சத்தம் போட்டு பொதுமக்களை கூட்டினார். "நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கைது செய்துள்ளோம்' என பொதுமக்களிடம் விஜிலென்ஸ் போலீசார் கூறினர்.அங்கு கூடியிருந்த ஒருவர், "இந்த நபரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்த மருந்துக் கடை உரிமையாளர், வேலை முடியாததால் பல மாதங்களாக அலைந்துகொண்டிருக்கிறார். அலுவலகத்திற்கு எதிரேயுள்ள வீட்டுக்காரரிடமே 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கியவர் இவர்' என விஜிலென்ஸ் போலீசாரிடம் கூறினர். ஆறு மாதத்திற்கு வீட்டு வரி 122 ரூபாய். அதற்கு 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



29 ஜூலை 2009

லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற ஆய்வாளர்: தடுத்த கான்ஸ்டபிள் விரலிலும் விழுந்தது 'கடி'

ஊட்டி: கூலி தொழிலாளியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நகராட்சி ஆய்வாளரை, ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்; லஞ்ச பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த போது தடுத்த கான்ஸ்டபிள் விரலையும் ஆய்வாளர் கடித்தார். ஊட்டி பழைய மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்; கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். அரசு சார்பில் கண்ணனுக்கு கடந்த பிப்ரவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு வரி கட்ட வேண்டி, கடந்த மே 25ம் தேதி ஊட்டி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். வீட்டுக்கு ஆண்டு வரி 310 ரூபாய் என்றும், வரி விதிக்க தனக்கு லஞ்சமாக 1200 ரூபாய் தர வேண்டும் என வருவாய் ஆய்வாளர் விஸ்வநாதன்(47) கண்ணனிடம் கேட்டுள்ளார்.அப்போது கண்ணன், "தான் "டைபாய்டு' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கூலி வேலை செய்து வருவதாலும் லஞ்சம் தர முடியாது,' என தெரிவித்துள்ளார். இந்நிலையில், "லஞ்சம் கொடுத்தால் தான் வீட்டுக்கு வரி விதிக்க முடியும்,' என கூறி 200 ரூபாய் தள்ளுபடி கொடுத்து 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் நேற்று புகார் அளித்துள்ளார்.

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது



கருமத்தம்பட்டி: இலவச மின் இணைப்பு பெற தடையின்மை சான்றிதழ் வழங்க, லஞ்சம் வாங்கிய கருமத்தம்பட்டி வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி எளச்சிபாளையம், ஆலாங்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (29).

இவர் தனக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் இலவச மின்சாரத்துக்கு மின்இணைப்பு பெற விண்ணப்பித்தார். இதற்காக இடம் குறித்த எம்.பி.எப்., ஸ்கெட்ச், பட்டா, கந்தாய ரசீது மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தடையின்மைச் சான்று ஆகியன பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டார்.

இவற்றைப் பெற, கருமத்தம்பட்டி வி.ஏ.ஓ., பூபதியிடம் சென்றுள்ளார். கடந்த 22ம் தேதி இதற்காக விண்ணப்பித்த போது, இவற்றை வழங்க பூபதி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின், பேரம் பேசி 8,000 ரூபாய் பெற்றுக் கொள்ள சம்மதித்தார். முன்பணமாக 2,000 ரூபாய் பெற்றுக் கொண்டார். இது குறித்து பாலசுந்தரம், கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.

நேற்று காலை பாலசுந்தரம், பூபதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கருமத்தம்பட்டி புதூரிலிருந்து எளச்சிபாளையம் செல்லும் ரோட்டில் வந்து பணத்தை தருமாறு கூறியுள்ளார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை பாலசுந்தரம், பூபதியிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், கருணாகரன் மற்றும் உன்னிகிருஷ்ணன் அடங்கிய போலீஸ் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., பூபதி, தன் அலுவலகத்துக்கு வருவோரிடம் வற்புறுத்தி பணம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பணம் பெறுவதோடு மட்டுமல்லாமல், வருவோரை மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தாமதம் செய்து, பொதுமக்களை இழுத்தடிப்பதாகவும் புகார் உள்ளது.



28 ஜூலை 2009

கொலையாளியிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிய கரூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கரூரை அடுத்த வேலாயுதம் பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றியவர் கருணாகரன் (வயது 48). இவர் சமீபத்தில்தான் குளித்தலையில் இருந்து இடமாறுதல் ஆகி வேலா யுதம் பாளையத்தில் பொறுப் பேற்றார்.
இந்நிலையில் இன்ஸ் பெக்டர் கருணாகரன், குன்னம் சத்திரம் நடுபாளை யத்தில் விவசாயி பெரிய சாமி கொலை செய்யப் பட்ட வழக்கில் முதல் குற்றவாளியிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம் வாங்கிவிட்டு அவரை தப்ப விட்டதாக கூறப்பட்டது.
மேலும் மற்றொரு சாலை விபத்தில் சண்முகம் என்பவர் பலியானதில் விபத்தை ஏற்படுத்தியவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தப்பவிட்டதாக கூறப்பட்டது.
இந்த 2 புகாரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினகரனுக்கு தெரிய வந்தது. அவர் உடனே இதுபற்றி விசாரணை நடத்தினார். அதில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் லஞ்சம் பெற்று குற்றவாளியை தப்பவிட்டது உறுதியானது.
இதனையடுத்து அவரை சஸ்பெண்டு செய்ய போலீஸ் சூப்பிரண்டு தினகரன், திருச்சி சரக டி.ஐ.ஜி. ராம சுப்பிரமணியனுக்கு பரிந்துரை செய்தார்.
டி.ஐ.ஜி. ராமசுப்பிர மணியன், இன்ஸ்பெக்டர் கருணாகரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை கரூர் மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம்; கிராம நிர்வாக அதிகாரி கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்னங் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நிலப்பட்டா மாற்றம் செய்ய, அனந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை அணுகினார். இதற்காக ரூ.2ஆயிரத்து500 லஞ்சம் தருமாறு ஜெகநாதன் கேட்டார். இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சாருக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்தார்.
பின்னர் நேற்று மணி கண்டன் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ ஜெகநாதனிடம் கொடுத்தார். அதை ஜெகநாதன் வாங்கிய போது லஞ்ச ஒழி¢ப்பு போலீசார் விரைந்து வந்து ஜெகநாதனை கைது செய்தனர். அவர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.


லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை: ராணுவத்துக்கு ஆள் எடுத்ததில் முறைகேடு; அதிகாரிகள் சிக்கினர்

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ராணுவத்துக்கு ஆள் எடுப்பது வழக்கம்.
இதே போல ராஜஸ் தானில் சமீபத்தில் ஆள் தேர்வு நடந்தது. அப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆள் தேர்வு செய்தது தெரிய வந்துள்ளது.

தேர்வுக்கு வந்தவர்கள் பலரிடம் தலா ரூ.1 1/2 லட்சம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்துள்ளனர். இதில் தேர்வு குழுவில் இருந்த ராணுவ அதிகாரிகளும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும், டாக்டர்களும் சம்பந்தப்பட்டு உள்ளனர். முன்னாள் ராணுவ அதிகாரிகள் சில ரும் உடந்தையாக இருந் துள்ளனர்.

இது தொடர்பாக மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது 6 ஆண்டுகளாக இதே போன்று மோசடி நடந்து வருவது தெரியவந்தது.

தேர்வு செய்தவர்களை உடல் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீனிவாஸ், மைத்ரேயி, பிரசாத் ஆகி யோரும் முறைகேட்டில் சம் பந்தப்பட்டு இருந்தனர்.
ஊழலில் ராணுவ அதி காரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் ராணுவ தரப்பி லும் விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றி ஜோத்பூர் ராணுவ ஆள் தேர்வு டைரக் டர் பாரத்குமார் கூறும் போது Òசில ஜூனியர் பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் தவறு செய்து இருப்பது தெரிந்தால் ராணுவ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


நாகை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ரோடு காண்டிராக்டர். இவரது மகன் செங்குட்டுவன்(35). இவர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர். திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழத்தஞ்சாவூர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சத்தில் 2 சிமெண்ட்டு சாலைகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பன்னீர்செல்வம் பெற்றார். அந்த பணி நிறைவு பெற்றது.
இதற்கான ரசீதுகளை அனுமதித்து காசோலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பன்னீர்செல்வம் சார்பில் அவரது மகன் செங்குட்டுவன் திருமருகல் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சந்தான கோபாலனை அணுகினார். ஆனால் சந்தான கோபாலன் காசோலை அனுமதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறினாராம்.
இதுபற்றி செங்குட்டுவன் நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுறைப்படி ரசாயன பொடி தூவிய ரூ.10 ஆயிரம் பணத்தை உதவி பொறியாளர் சந்தான கோபாலனிடம் செங்குட்டுவன் கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மாணிக்கவாசம், இன்ஸ்பெக்டர் சித்திரவேல் மற்றும் போலீசார் சென்று சந்தானகோபாலனை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனையிட்டனர். அதில் ரூ.10,100 இருந்தது. உடனே அதனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


லஞ்சம் வாங்கியபோது கைதான இன்ஸ்பெக்டர் “சஸ்பெண்டு”

சென்னை மகாகவி பாரதியார் நகர் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் கருணாநிதி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூலிப்பதாகவும் லஞ்சம் தராதவர்களை வழக்கு போடுவதாக மிரட்டு வதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.
இந்த நிலையில் இந்திரா என்ற பெண்ணிடம் இரவு டிபன் கடை நடத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். மொத்தமாக கொடுக்க முடியாவிட்டால் வாரம் ரூ.1250 வீதம் தருமாறு வற்புறுத்தினார். இல்லையென்றால் ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என மிரட்டி வந்தார். இதை யடுத்து இந்திரா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்திராவிடம் ரூ.1250 லஞ்சம் பெற்றபோது, இன்ஸ்பெக்டர் கருணாநிதி கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் கருணாநிதி லஞ்சம் வாங்கியதாக கைதான ஆதாரங்களையும் தகவல் அறிக்கையும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச வழக்கில் கைதான கருணாநிதி சஸ்பெண்டு செய்யப்படுவார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டர் கருணாநிதி கைதானது குறித்து அந்த பகுதியில் உள்ள ஓட்டல் நடத்தும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பகுதியில் பாஸ்ட் புட் கடைக்கு ரூ.1000, பான்பராக், பீடா கடைக்கு ரூ.1,500, இரவு டிபன் கடைக்கு ரூ.500 என மாத மாமூல் வசூலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கணவருடன் கைது; உதவியாக இருந்த மேலும் 2 பேரும் சிக்கினர்

துறையூர் அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு மின் இணைப்பு கேட்டு உப்பிலியபுரம் உதவி மின் என்ஜினீயர் அலுவலகத்துக்கு செல்வராஜ் சென்றார். அங்கு இருந்த உதவி மின் என்ஜினீயர் ஜெயஸ்ரீ மின் இணைப்பு கொடுக்க தனக்கு ரூ.1500 லஞ்சம் வேண்டும் என்று கேட்டார். உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ரூ.500 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனால் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. அம்பிகாபதி மற்றும் போலீசார் திட்டப்படி ரசாயனபொடி தடவப்பட்ட பணத்தை இன்று காலை ஜெயஸ்ரீயிடம் செல்வராஜ் கொடுத்தார். அவர் துப்புரவு ஊழியர் கமலத்தை பணத்தை வாங்கி தனது கணவர் வக்கீல் பாண்டியனிடம் கொடுக்க சொன்னார். உதவி ஆய்வாளர் வெங்கடேசன் லஞ்ச பணம் ரூ.500ஐ பெற்றுக்கொண்டார்.
உடனே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் அதிகாரி ஜெயஸ்ரீ, அவரது கணவர் வக்கீல் பாண்டியன், உதவி ஆய்வாளர் வெங்கடேசன், துப்புரவு ஊழியர் கமலம் ஆகிய 4 பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் பிடிபட்டவர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


தங்க காசு மோசடி கும்பலிடம் ரூ. 1 கோடி லஞ்சம்: 3 போலீஸ் அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை; தமிழகம் முழுவதும் 16 இடங்களில் நடந்தது

சென்னையில் கடந்த ஆண்டு “கோல்டு குவெஸ்ட்” நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது. இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து அதன் நிர்வாகிகள் புஷ்பம், பத்மா உள்பட பலரை கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் கட்டினால் தங்க காசு வழங்கப்படும். அவர்கள் 3 உறுப்பினர்களை சேர்த்து விட்டால் ஊக்கத்தொகை கிடைக்கும். இவ்வாறு சங்கிலி தொடர் போல் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோர் தங்கள் நகையையும், வீட்டையும் அடமானம் வைத்து சேர்ந்தனர். மேலும் பலர் வேலையை ராஜினாமா செய்து விட்டு உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு நேரமும் ஈடுபட்டனர்.
ஏராளமான ஏஜெண்டுகள், இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இங்கு மோசடி நடப்பதாக போலீசுக்கு புகார் வந்ததால் இந்த நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஏஜெண்டுகள் பலர் தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரோஸ்கான் என்ற ஏஜெண்டை பிடிக்காமல் இருக்க அவரிடம் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சி.பி.சி. ஐ.டி. இன்ஸ்பெக்டர் சுந்தரரேஸ்வரபாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், ஏட்டு ராமானுஜம் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்று காலை 3 பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனுக்கு சொந்த ஊர் தேனி. சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். தேனியிலும், டி.பி.சத்திரத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியன் வீட்டில் இல்லை. மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு லட்சுமி மேற்பார்வையில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் குமரன், கஜேந்திரன் ஆகியோர் சோதனை நடத்தினர்.
இதே போல் விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு ராமானுஜம் வீட்டிலும், ஆவடி போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
ஏட்டு ராமானுஜத்தின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சிறுவை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனின் உறவினர் ஒருவரின் வீடு புதுவையில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, இன்று நடைபெற்ற சோதனையின்போது பெரும்பாலான இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏன்னென்ன ஆவணங்கள் என்பதை தெரிவிக்க இயலாது என்றார்.
லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.பி.சத்திரம், ஆவடி, விருகம்பாக்கம் போலீஸ் குடியிருப்புகளில் சோதனை காரணமாக பரபரப்பு நிலவியது.


விவசாயத்துக்கு இலவச மின்சாரம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி கைது

கருமத்தம்பட்டி, ஜூலை. 28-
கோவையை அடுத்த கருத்தம்பட்டி அருகேயுள்ள எலச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலசுந்தரம் (வயது 29). இவர் தனது தோட்டத்துக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரியத்திடம் விண்ணப்பித்தார்.
அப்போது மின் வாரிய அதிகாரிகள் வரைபடம், கந்தாய ரசீது ஆகியவற்றை கேட்டனர். அவற்றை பெறுவதற்காக கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பூபதி¢யை பாலசுந்தரம் சந்தித்தார். இலவச மின்சாரம் பெறு வதற்கு உரிய சான்றிதழ் களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு அதிகாரி பூபதி ரூ. 10 ஆயிரம் தந்தால் தான் சான்றிதழ் தர முடியும் என்றார். அந்த அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. 7 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று பாலசுந்தரம் கூறினார். சம்மதம் தெரிவித்த அதி காரி ரூ. 2 ஆயிரத்தை முன் பணமாக பெற்றுக் கொண்டார்.
கிராம அதிகாரி லஞ்சம் கேட்பது குறித்து கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் பாலசுந்தரம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் ரசாயன பொடி தடவிய ரூ. 5 ஆயி ரத்தை கிராம அதிகாரி பூபதியிடம் பாலசுந்தரம் இன்று கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ் பெக்டர்கள் உன்னி கிருஷ் ணன், கருணாகரன், ஞான சேகரன் ஆகியோர் கிராம அதிகாரியை கையும் களவு மாக பிடித்து கைது செய்தனர்.


நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய உணவு ஆய்வாளர் கைது

நாமக்கல் : பால் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற உணவு ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் அருகிலுள்ள தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரியான இவர், தினமும் காலையில் நாமக்கல் பகுதியில் பால் ஊற்றுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை, அவர் பால் வியாபாரத்திற்கு சென்ற போது, அவ்வழியே வந்த உணவு ஆய்வாளர் சுப்பையா மற்றும் அவரது உதவியாளர் பெரியசாமி ஆகியோர், சக்திவேல் கலப்பட பாலை விற்பனை செய்வதாக கூறி, அவரது பால்கேனை பறிமுதல் செய்தனர். கேனை ‌திருப்பி அளிக்க ரூபாய் 1500 அளிக்க வேண்டும் என கோரினர். இதையடுத்து சக்திவேல், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், சுப்பையாவின் அலுவலகம் சென்ற சக்திவேல் லஞ்சத்தை அளித்த போது, மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக சுப்பையாவையும், அவரது உதவியாளர் பெரியசாமியையும் கைது செய்தனர்.

மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் பெற லஞ்சம்: அதிகாரி உட்பட 2 பேர் கைது ஆயிரக்கணக்கில் பணம், ஆபாச புத்தகங்கள் பறிமுதல்


மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் பெற 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உதவியாளரிடம் 32 ஆயிரத்து 400 ரூபாய், ஆபாச புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையை சேர்ந்தவர் உதயகுமார். இவர் நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜ் பல்கலையில் தொலை நிலைக் கல்வி இயக்ககம் மூலம் முதுநிலை எம்.எல்.எம்., படித்தார். அவர் 2008 ல் தேர்ச்சி பெற்றார். தொலைக்கல்வி இயக்கக கண்காணிப்பாளர் ராமசாமியிடம் மதிப்பெண் பட்டியல் கோரினார். அவர்,""உடனே தர 3000 ரூபாய் லஞ்சம் வேண்டும்'' என்றார். பின் பேரம் பேசி 2000 ரூபாய் தர உதயகுமார் சம்மதித்தார். அவர் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை 5.15 மணிக்கு பல்கலை நுழைவு வாயிலுக்கு மதிப்பெண் பட்டியலுடன் ராமசாமி வந்தார். அவரிடம் உதயகுமார் ரசாயன கலவை தடவிய 2000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிய ராமசாமியை டி.எஸ்.பி.,குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி ஆனந்தன், ரமேஷ், மணிமாறன், பெருமாள் பாண்டியன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரை விசாரிக்க தொலை நிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்த அலுவலக உதவியாளர் முருகனிடம், போலீசார்,"" நீங்கள் புறப்படுங்கள்,'' என்றனர். முருகன் அலட்சியமாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது மேஜை "டிராயருக்குள்' கணக்கில் வராத 32 ஆயிரத்து 400 ரூபாய் பணம், ஆபாச புத்தகங்கள், பூர்த்தி செய்யப்படாத மதிப்பெண் பட்டியல்கள், "புரவிஷனல்' சான்றிதழ்கள், டைரி இருந்தன. டைரியில் 50 க்கும் மேற்பட்ட மொபைல்போன் எண்கள் இருந்தன. அவை "விலைமாதர்'களின் எண்கள் என தெரியவந்தது. முருகனின் மொபைல்போனில் ஐந்து எஸ்.எம்.எஸ்.,கள் பதிவாகியிருந்தன. அதில் ஒன்றில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருவரிடமும் போலீசார் நள்ளிரவு வரை விசாரித்தனர். தற்போது கைதாகியுள்ள ராமசாமி, பல்கலை துணைவேந்தராக இருந்த சிட்டிபாபுவின் உறவினர். இப்பல்கலையில் 1987 ல் போலி மதிப்பெண் பட்டியல் மோசடி நடந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பின் பல்கலை ஊழியர்கள் கைதாகினர். அதன் பின் மதிப்பெண் பட்டியல் பெற லஞ்சம் பெற்று சிக்கியது இதுவே முதல்முறையாகும்.

27 ஜூலை 2009

மதிப்பெண் பட்டியல் வழங்க 2 ஆயிரம் லஞ்சம் : பல்கலை., கண்காணிப்பாளர் பிடிபட்டார்

மதுரை : உடனடியாக மதிப்பெண் பட்டியல் வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மதுரை காமராஜர் பல்கலை., தொலைநிலைக்கல்வி இயக்கக கண்காணிப்பாளர் மற்றும் அவரது உதவியாளர் கையும் களவுமாக பிடிபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி மூலம் கல்வி பயின்ற மாணவர் ஒருவர், மதிப்பெண் பட்டியல் கோரி, அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு உடனடியாக மதிப்பெண் பட்டியல் வழங்க ரூ.2 ஆயிரம் தருமாறு, இயக்கக கண்காணிப்பாளர் ராமசாமி கோரினார். இதையடுத்து, மாணவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மாணவர் பணம் அளித்த போது கையும் களவுமாக ராமசாமியை பிடித்தனர். மேலும் அவரது உதவியாளர் முருகனிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மற்றும் அவரது மேஜையிலிருந்து ஆபாச புத்தகம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச வழக்கில் கைதான நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் கைதான நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

ஓசூர்: ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய போது கைதான இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஓசூர் நகராட்சியில் நேற்று முன்தினம் பட்டா வழங்கிட லஞ்சம் வாங்கிய சர்வேயர் வஜ்ரவேல், உதவி சர்வேயர் குழந்தைவேலு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் சஸ்பெண்ட் செய்ய நகராட்சி கமிஷனர் பன்னீர்செல்வம் தாசில்தார் முனிராஜுக்கு பரிந்துரை செய்தார். தாசில்தார் முனிராஜ் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.



23 ஜூலை 2009

மின் இணைப்பு கொடுக்க லஞ்சம் மின் வாரிய ஊழியர் கைது

மின் இணைப்பு கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அயனாவரம் மின் வாரிய ஊழியர் பழனிகுமார்(41) என்பவரை அணுகினார். அப்போது, அவர் மின் இணைப்பு கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து ராஜன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயனம் தடவிய நோட்டுகளை ராஜனிடம் கொடுத்தனர். அப்பணத்தை ராஜன் மின் வாரிய ஊழியர் பழனிகுமாரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த தனிப்படையினர் அவரை கையும், களவுமாகப் பிடித்தனர்.


நன்றி :தினமலர்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இமிகிரேசன் அதிகாரி சேகருக்கு பல கோடி ரூபாய் சொத்து !


இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இமிகிரேசன் அதிகாரி சேகருக்கு, சென்னை கிழக்கு கடற்கரை சாலை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் வசித்து வரும் இமிகிரேசன் அதிகாரியை, லஞ்சம் வாங்கிய வழக்கில் சி.பி.ஐ., போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு கோர்ட் அனுமதித்தது.கைதான இமிகிரேசன் அதிகாரி சேகர், அவரது பினாமியாக செயல்பட்ட அன்வர் உசேன், அறக்கட்டளை நடத்தி வரும் ரவீந்திரபாபு ஆகியோரிடம் சி.பி.ஐ., தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேற்கு அண்ணா நகரில், சக்ரா நீச்சல் குளம் அருகே அன்வர் உசேன் வீடு உள்ளது. கோடம்பாக்கத்தில் "கிளாசிங் டவர்ஸ் அன்ட் டிராவல்ஸ்' என்ற பெயரில் அலுவலகம் உள்ளது. இந்த இரு இடங்களில் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ.,க்கு கிடைத்தன.


அன்வர் உசேனை போல இஸ்மாயில் (35) என்ற புரோக்கர் உட்பட 12 டிராவல்ஸ் ஏஜென்ட்கள், சி.பி.ஐ., போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள், ரயில்வே, வணிகவரித்துறை, சுங்க வரித்துறை உட்பட பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளின் "கேம்ப் கிளர்க்குகளை' கையில் வைத்துள்ளனர். போலி ஆவணங்களை தாக்கல் செய்து பலரை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.சேகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட புதிய சுவிப்ட் கார், புரோக்கர் அன்வர் உசேனின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை, நெல்லை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற இடங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகள் உள்ள விவரத்தை சி.பி.ஐ., போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.அந்த சொத்துகளை மாத சம்பளத்தில் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவை அனைத்தையும் லஞ்ச பணத்தில் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, கோர்ட் உத்தரவு பெற்று முடக்கும் நடவடிக்கையில் சி.பி.ஐ., இறங்கியுள்ளது.

தேர்தல் முடிவுபோன்ற தகவல்: இமிகிரேசன் அதிகாரி சேகரை சி.பி.ஐ., தனிப்படை யினர் கைது செய்தவுடன், அவரது பினாமியாக செயல்பட்ட புரோக்கர் அன்வர் உசேன் வீடு, அலுவலகம், வங்கி லாக்கரில் சோதனை நடத்தினர். வீட்டில் சில லட்சம் ரூபாய் சிக்கியது. தேர்தல் முடிவுகள் போல, நேரம் செல்லச் செல்ல, 50 லட்சம், ஒரு கோடி, ஒன்றரை கோடி, இரண்டு கோடி என தொகையின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருந்தது. கடைசியில் இரண்டு கோடியே 2 லட்சம் ரூபாய் என முடிவுக்கு வந்தது.

நன்றி :தினமலர்




அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் ?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைமை அலுவலகத்தை 044-24615989, 24615949 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ லஞ்சம் கேட்டால், அதுகுறித்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரெண்டிடம் 044-28273186, 28270942 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

98400 49224 என்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல் சேவை) அனுப்பலாம்.

044-28213828 என்ற பேக்ஸ் மூலமும் புகார் செய்யலாம்.



கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ்

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த ஓராண்டில், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 33 பேர், லஞ்ச வழக்கில் கைது செய் யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டனர். ஒரு புறம், லஞ்ச ஒழிப்பு வேட்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அசராத அரசுத் துறையினர், "இப்ப என்ன செய்வீங்க?' என்று லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு சவால் விடும் விதத்தில் ஊழலை தொடர்கின்றனர். அரசுத் துறைகளில் ஆழமாக வேர்விட்டு அடர்ந்து படர்ந்திருக்கும் லஞ்ச லாவண்யத்தை ஒடுக்க, அதிரடி சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு. எனினும், "இதற் கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என்பதை போல, அரசுத் துறை அலுவலர்கள், ஊழியர்களில் சிலர் அடாவடி வசூலை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய, திருட்டுப்போன பொருட்களை மீட்டுத்தர, வழக்கிலிருந்து விடுவிக்க, என பல வகைகளிலும் லஞ்சம் பெறப்படுகிறது. அதே போன்று, மின்வாரியத்தில் மின் இணைப்பு கொடுக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி வழங்க மற்றும் சொத்து வரியை குறைத்து நிர்ணயிக்கவும், வணிக வரித்துறை சோதனைச் சாவடிகளில் வரி ஏய்ப்பு செய்யவும், வருவாய்த் துறையில் சான்றிதழ்களை வழங்கவும் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதி தீவிர நடவடிக்கை, அலுவலர்களின் லஞ்சம் வாங்கும் முறையை ரகசியமாக மாற்றியிருக்கிறதே தவிர, முற்றாக ஒழித்துவிடவில்லை. காரணம், லஞ்சம் கொடுத்தாவது தமது காரியத்தை விரைந்து முடித்து விட வேண்டும் என்ற தவறான எண்ணம் பலரிடமும் மேலோங்கியிருக்கிறது. இது, அரசுத் துறையில் லஞ்ச, லாவண்ய முறைகேடுகளை ஒழிக்க, பெரும் தடையாக உள்ளது. கடந்த 2008 ஜூலை முதல் நேற்று வரை, கோவை மற்றும் திருப்பூர் மாவட் டங்களில் 23 வழக்குகளில், 33 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில், அவினாசி தாலுகா தாசில்தார் பாலசுப்ரமணியம், கோம் பக்காடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக இளநிலை பொறியாளர் செந்தில்முருகன், கணபதி கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், துடியலூர் போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன், பெ.நா.பாளையம் வேளாண் வங்கி செயலாளர் வேலுசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; மற்றவர்கள் ஊழியர்கள். இவர்களிடம் இருந்து 2.20 லட்ச ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது நடவடிக்கை தவிர, அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் மேற்கொள் ளப்பட்டது. கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இரு அலுவலகங்கள், பதிவுத்துறையின் ஐந்து அலுவலகங்கள், கோவை நகரமைப்பு அலுவலகம், போக்குவரத் துறையின் ஐந்து அலுவலகங்கள், வணிகத்துறை அலுவலகம், பல்லடம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, திருப் பூர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.தவிர, கோவை மற்றும் மேட்டுப் பாளையத்திலுள்ள போக்குவரத்து துறையின் நான்கு செக்போஸ்ட்கள், கோவை தொழிலாளர் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 5.89 லட்ச ரூபாய் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 12 அரசுத் துறைகள் மற்றும் 23 செக்போஸ்ட்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.குறையவில்லை லஞ்சம்: லஞ்ச ஒழிப்புத் துறையினரின் தொடர் கைது மற்றும் சோதனை நடவடிக் கையை மீறி போலீஸ், அரசுத் துறைகளில் லஞ்ச முறைகேடு தொடர்கிறது. "நேரடியாக லஞ்சம் வாங்கினால் பிடிபட்டு விடுவோம்' என்ற முன்னெச்சரிக்கையுடன் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் "ஏஜன்ட்'களை நியமித்துள்ளனர். சமீபத்தில், கோவையில் மருந்து ஆய்வாளர் கைது செய் யப்பட்ட போது இத்தகவல் அம்பலமானது. தொடர்ந்து, லஞ்சம் வசூலிக் கும் ஏஜன்டாக செயல்பட்ட, காந்திபுரத்திலுள்ள மருந்துக்கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். இதே முறையை, போலீஸ், போக் குவரத்து துறை, வணிகவரித் துறை, மின் வாரியம், பதிவுத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சில அதிகாரிகளும் பின் பற்றி வருவதாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத் துள்ளது. ஏஜன்ட்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்துள்ள லஞ்ச ஒழிப்பு துறையினர், ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, கோவை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியதாவது:அரசுத் துறைகளில் லஞ்சம் கேட் கும் அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம். லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு மக்களிடம் முழு அளவில் ஏற்பட்டால் மட்டுமே, அரசுத் துறைகள் சுபிட்சம் பெறும். இல்லாவிடில், நாங்கள் ஒரு புறம் நடவடிக்கை எடுத்துக் கொண் டிருக்க, மறுபுறம் லஞ்ச லாவண்ய நடவடிக்கைகள் தொடரவே செய் யும். லஞ்ச பேர்வழிகள் மீதான சட்டப்படியான நடவடிக்கை மற்றும் ஆலோசனைக்கு கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டிலுள்ள மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தை 0422 - 2238 647 என்ற எண்ணில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி :தினமலர்