28 ஜூலை 2009
மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் பெற லஞ்சம்: அதிகாரி உட்பட 2 பேர் கைது ஆயிரக்கணக்கில் பணம், ஆபாச புத்தகங்கள் பறிமுதல்
மதுரை காமராஜ் பல்கலையில் மதிப்பெண் பட்டியல் பெற 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். உதவியாளரிடம் 32 ஆயிரத்து 400 ரூபாய், ஆபாச புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையை சேர்ந்தவர் உதயகுமார். இவர் நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜ் பல்கலையில் தொலை நிலைக் கல்வி இயக்ககம் மூலம் முதுநிலை எம்.எல்.எம்., படித்தார். அவர் 2008 ல் தேர்ச்சி பெற்றார். தொலைக்கல்வி இயக்கக கண்காணிப்பாளர் ராமசாமியிடம் மதிப்பெண் பட்டியல் கோரினார். அவர்,""உடனே தர 3000 ரூபாய் லஞ்சம் வேண்டும்'' என்றார். பின் பேரம் பேசி 2000 ரூபாய் தர உதயகுமார் சம்மதித்தார். அவர் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை 5.15 மணிக்கு பல்கலை நுழைவு வாயிலுக்கு மதிப்பெண் பட்டியலுடன் ராமசாமி வந்தார். அவரிடம் உதயகுமார் ரசாயன கலவை தடவிய 2000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிய ராமசாமியை டி.எஸ்.பி.,குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் இசக்கி ஆனந்தன், ரமேஷ், மணிமாறன், பெருமாள் பாண்டியன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரை விசாரிக்க தொலை நிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்த அலுவலக உதவியாளர் முருகனிடம், போலீசார்,"" நீங்கள் புறப்படுங்கள்,'' என்றனர். முருகன் அலட்சியமாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது மேஜை "டிராயருக்குள்' கணக்கில் வராத 32 ஆயிரத்து 400 ரூபாய் பணம், ஆபாச புத்தகங்கள், பூர்த்தி செய்யப்படாத மதிப்பெண் பட்டியல்கள், "புரவிஷனல்' சான்றிதழ்கள், டைரி இருந்தன. டைரியில் 50 க்கும் மேற்பட்ட மொபைல்போன் எண்கள் இருந்தன. அவை "விலைமாதர்'களின் எண்கள் என தெரியவந்தது. முருகனின் மொபைல்போனில் ஐந்து எஸ்.எம்.எஸ்.,கள் பதிவாகியிருந்தன. அதில் ஒன்றில் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருவரிடமும் போலீசார் நள்ளிரவு வரை விசாரித்தனர். தற்போது கைதாகியுள்ள ராமசாமி, பல்கலை துணைவேந்தராக இருந்த சிட்டிபாபுவின் உறவினர். இப்பல்கலையில் 1987 ல் போலி மதிப்பெண் பட்டியல் மோசடி நடந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பின் பல்கலை ஊழியர்கள் கைதாகினர். அதன் பின் மதிப்பெண் பட்டியல் பெற லஞ்சம் பெற்று சிக்கியது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக