சென்னையில் கடந்த ஆண்டு “கோல்டு குவெஸ்ட்” நிறுவனம் தங்க காசு மோசடியில் ஈடுபட்டது. இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து அதன் நிர்வாகிகள் புஷ்பம், பத்மா உள்பட பலரை கைது செய்தனர்.
இந்த நிறுவனத்தில் ரூ. 30 ஆயிரம் கட்டினால் தங்க காசு வழங்கப்படும். அவர்கள் 3 உறுப்பினர்களை சேர்த்து விட்டால் ஊக்கத்தொகை கிடைக்கும். இவ்வாறு சங்கிலி தொடர் போல் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இதில் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோர் தங்கள் நகையையும், வீட்டையும் அடமானம் வைத்து சேர்ந்தனர். மேலும் பலர் வேலையை ராஜினாமா செய்து விட்டு உறுப்பினர்கள் சேர்க்கையில் முழு நேரமும் ஈடுபட்டனர்.
ஏராளமான ஏஜெண்டுகள், இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இங்கு மோசடி நடப்பதாக போலீசுக்கு புகார் வந்ததால் இந்த நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஏஜெண்டுகள் பலர் தலைமறைவாகி விட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரோஸ்கான் என்ற ஏஜெண்டை பிடிக்காமல் இருக்க அவரிடம் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக சி.பி.சி. ஐ.டி. இன்ஸ்பெக்டர் சுந்தரரேஸ்வரபாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், ஏட்டு ராமானுஜம் ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து 3 பேரும் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்று காலை 3 பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனுக்கு சொந்த ஊர் தேனி. சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். தேனியிலும், டி.பி.சத்திரத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியன் வீட்டில் இல்லை. மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு லட்சுமி மேற்பார்வையில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் குமரன், கஜேந்திரன் ஆகியோர் சோதனை நடத்தினர்.
இதே போல் விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏட்டு ராமானுஜம் வீட்டிலும், ஆவடி போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
ஏட்டு ராமானுஜத்தின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சிறுவை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியனின் உறவினர் ஒருவரின் வீடு புதுவையில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி கூறும்போது, இன்று நடைபெற்ற சோதனையின்போது பெரும்பாலான இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏன்னென்ன ஆவணங்கள் என்பதை தெரிவிக்க இயலாது என்றார்.
லஞ்ச புகாரில் சிக்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டி.பி.சத்திரம், ஆவடி, விருகம்பாக்கம் போலீஸ் குடியிருப்புகளில் சோதனை காரணமாக பரபரப்பு நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக