நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள எரவாஞ்சேரியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ரோடு காண்டிராக்டர். இவரது மகன் செங்குட்டுவன்(35). இவர் மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர். திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழத்தஞ்சாவூர் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.08 லட்சத்தில் 2 சிமெண்ட்டு சாலைகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை பன்னீர்செல்வம் பெற்றார். அந்த பணி நிறைவு பெற்றது.
இதற்கான ரசீதுகளை அனுமதித்து காசோலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பன்னீர்செல்வம் சார்பில் அவரது மகன் செங்குட்டுவன் திருமருகல் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சந்தான கோபாலனை அணுகினார். ஆனால் சந்தான கோபாலன் காசோலை அனுமதிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறினாராம்.
இதுபற்றி செங்குட்டுவன் நாகை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுறைப்படி ரசாயன பொடி தூவிய ரூ.10 ஆயிரம் பணத்தை உதவி பொறியாளர் சந்தான கோபாலனிடம் செங்குட்டுவன் கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மாணிக்கவாசம், இன்ஸ்பெக்டர் சித்திரவேல் மற்றும் போலீசார் சென்று சந்தானகோபாலனை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் போலீசார் சோதனையிட்டனர். அதில் ரூ.10,100 இருந்தது. உடனே அதனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக