கருமத்தம்பட்டி: இலவச மின் இணைப்பு பெற தடையின்மை சான்றிதழ் வழங்க, லஞ்சம் வாங்கிய கருமத்தம்பட்டி வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி எளச்சிபாளையம், ஆலாங்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (29).
இவர் தனக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் இலவச மின்சாரத்துக்கு மின்இணைப்பு பெற விண்ணப்பித்தார். இதற்காக இடம் குறித்த எம்.பி.எப்., ஸ்கெட்ச், பட்டா, கந்தாய ரசீது மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தடையின்மைச் சான்று ஆகியன பெற்று, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டார்.
இவற்றைப் பெற, கருமத்தம்பட்டி வி.ஏ.ஓ., பூபதியிடம் சென்றுள்ளார். கடந்த 22ம் தேதி இதற்காக விண்ணப்பித்த போது, இவற்றை வழங்க பூபதி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பின், பேரம் பேசி 8,000 ரூபாய் பெற்றுக் கொள்ள சம்மதித்தார். முன்பணமாக 2,000 ரூபாய் பெற்றுக் கொண்டார். இது குறித்து பாலசுந்தரம், கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்தார்.
நேற்று காலை பாலசுந்தரம், பூபதியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கருமத்தம்பட்டி புதூரிலிருந்து எளச்சிபாளையம் செல்லும் ரோட்டில் வந்து பணத்தை தருமாறு கூறியுள்ளார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை பாலசுந்தரம், பூபதியிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், கருணாகரன் மற்றும் உன்னிகிருஷ்ணன் அடங்கிய போலீஸ் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா விசாரணை நடத்தினார். கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., பூபதி, தன் அலுவலகத்துக்கு வருவோரிடம் வற்புறுத்தி பணம் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பணம் பெறுவதோடு மட்டுமல்லாமல், வருவோரை மரியாதை இல்லாமல் பேசுவதாகவும், சான்றுகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தாமதம் செய்து, பொதுமக்களை இழுத்தடிப்பதாகவும் புகார் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக