புதியவை :

Grab the widget  Tech Dreams

02 அக்டோபர் 2009

மதுரை அரசு மருத்துவமனையில் லஞ்சம்.




மதுரை: மதுரை அரசு மருத்துவமனை நிகழ்வுகள் மற்றும் லஞ்சத்தை தவிர்க்க, 32 கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இங்கு 2,266 உள்நோயாளிகளும், 8,000 புறநோயாளிகளும் தினமும் சிகிச்சை பெறுகின்றனர். 2,200 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சிலர் பணிக்கு வந்ததும் கையெழுத்து போட்டுவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகின்றனர். சில ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே பணிபுரிகின்றனர். சமீபத்தில், லஞ்சஒழிப்பு போலீசாரிடம் சில ஊழியர்கள் பிடிபட்டனர். இதை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக, பணி நேரத்தில் ஊழியர்கள் மருத்துவமனையில் இருக்கும் வகையில், 80 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு தானியங்கி விரல் ரேகைப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

நேற்று முதல் அலுவலக பணியாளர்கள் விரல் பதிவு செய்கின்றனர். மருத்துவமனையில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், ஊழியர்களை கண்காணிக்கவும், 4.20 லட்சம் ரூபாயில் டீன் அறை பகுதி, மகப்பேறு, வெளிநோயாளிகள் பிரிவு, பிரேத அறை, அவசர சிகிச்சைப் பிரிவு, ஏ.ஆர்.டி., சென்டர், கைதிகள் வார்டு, ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கும் பகுதிகள் உட்பட 32 இடங்களில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பணியை, மதுரை பினீக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.

உரிமையாளர் மாரியப்பன் கூறுகையில், ""காலை 8 முதல் இரவு 7 மணி வரை பதிவு செய்யப்படும். டீன் சிவக்குமார் தனது அறையிலிருந்தும், வீட்டில் இருந்தும் கண்காணிக்க முடியும். சமீபத்தில் வெள்ளோட்டம் பார்த்த போது, லஞ்சம் வாங்கிய ஊழியர் மற்றும் சமையல் கூடத்தில் முட்டைகளை சாப்பிட்ட ஊழியர் பிடிபட்டனர். விரைவில், சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் அறையிலிருந்து இன்டர்நெட் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

லஞ்சம் வாங்கிய பள்ளி எழுத்தர் ரங்கராஜ் கைது

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோவில் பள்ளி எழுத்தர், 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சி, திருவானைக்கோவில் சன்னிதி வீதியில், திருவானைக்கோவில் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளி.


இந்த பள்ளியில் எழுத்தராக பணிபுரிபவர் ரங்கராஜ். இதே பள்ளியில் பணிபுரியும் மாரியப்பன் என்ற ஆசிரியர் தனக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரங்கராஜால் அலைக்கழிக்கப்பட்டார். நிலுவைத் தொகை பெற வேண்டும் என்றால், தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரங்கராஜ் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் மாரியப்பன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் செய்தார். எழுத்தர் ரங்கராஜிடம் நேற்று காலை ஆசிரியர் மாரியப்பன், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், 2,000 ரூபாய் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், ரங்கராஜை கையும், களவுமாக கைது செய்தனர்.

கள்ளிக்குளம் வி.ஏ.ஓ.,ராஜலிங்கம் கைது - 1,500 ரூபாய் லஞ்சம்

திருநெல்வேலி: நெல்லை அருகே, நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்து தர, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் சுதன்(31). இவர் வாங்கிய நிலத்தின் பட்டாவை, தன் பெயருக்கு மாற்றித் தரக்கோரி, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., ராஜலிங்கத்திடம் (56) விண்ணப்பித்தார். இதற்காக ராஜலிங்கம், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மனமில்லாமல், நெல்லை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் சுதன் புகார் கொடுத்தார். நேற்று, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சுதனிடமிருந்து 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., ராஜலிங்கத்தை கைது செய்தனர்; அவரது வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது.

01 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை தலைமை எழுத்தர் தர்மராஜுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை.

திருநெல்வேலி: லஞ்சம் வாங்கிய பத்திரப்பதிவுத்துறை ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நெல்லை மாவட்டம், ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றியவர் தர்மராஜ்.

2001ல் திசையன்விளை கீரைக்காரன் தட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒரு சொத்து தொடர்பாக வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப்பித்தார். அரசு கட்டணம் தவிர 800 ரூபாய் லஞ்சம் தருமாறு தர்மராஜ் கேட்டார். பணம் தர விரும்பாத கண்ணன், லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று லஞ்சம் வாங்கும்போது தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நெல்லை சி.ஜெ.எம்.,கோர்ட் நீதிபதி பொன்பிரகாஷ், தலைமை எழுத்தர் தர்மராஜுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

30 செப்டம்பர் 2009

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ பஞ்சநாதன் ., கைது

திருப்புத்தூர்: பட்டா மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதன் கைது செய்யப்பட்டார். திருப்புத்தூர் அருகிலுள்ள சேவினிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (70). இவருக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை மருமகள் உலகி பெயருக்கு, திருப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.

இந்நிலத்திற்கான பட்டா மாறுதலுக்கு உலகி, சகோதரர் ராசுவுடன் வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதனிடம் மனு கொடுத்தார். அவர் பட்டா மாறுதலுக்கு ரூ. ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என இருவரும் கூறினர். முதல் தவணையாக ரூ.1,500 கொடுங்கள், மீதி தொகையை பட்டா வந்த பின் தாருங்கள்' என பஞ்சநாதன் கறாராக கூறினார். இது குறித்து ராசு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தந்தார்.

போலீசார் யோசனைப்படி நேற்று மாலையில் பஞ்சநாதனிடம் ரூ.1,500 ஐ ராசு லஞ்சமாக கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., குமாரசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன்,ராஜா குழுவினர், கையும் களவுமாக பஞ்சநாதனைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கண்ணதாசன் கைது





மதுரை: மதுரை வடக்கு தாலுகாவில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கண்ணதாசன், இளநிலை உதவியாளர் சங்கரன் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஜான்கென்னடி. பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விடுகிறார்.

மதுரை அருகே வரிச்சியூரில் கிரானைட் கற்களை அள்ளியது தொடர்பாக வி.ஏ.ஓ., மற்றும் பொதுமக்கள் அவரது இயந்திரத்தை சிறைப் பிடித்து, மதுரை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அவர், ஜான்கென்னடிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர் நடவடிக்கையாக மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு பைல் அனுப்பப்பட்டது. ஜான் கென்னடி, மதுரை வடக்கு தாலுகா அலுவலகம் சென்று துணை தாசில்தார் கண்ணதாசனை சந்தித்தார். அவரும், இளநிலை உதவியாளர் சங்கரனும் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஜான்கென்னடி மறுத்து பேரம் பேசினார். நீண்ட நேர அலைக்கழிப்புக்கு பின் 2,300 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டனர்.

ஜான் கென்னடி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி பணம் கொடுக்க மதியம் 3.45 மணிக்கு வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். போலீசாரின் யோசனையின் படி, ஜான் கென்னடி பணத்தை கொடுத்தபோது, அதை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் கண்ணதாசனையும், இளநிலை உதவியாளர் சங்கரனையும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வடக்கு தாலுகா அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. தாசில்தார் இளமதி அலுவலகத்தில் இல்லை. அலுவலகம் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. தாசில்தார் மேஜையில் இருந்து பொக்லைன் இயந்திர சாவி மீட்கப்பட்டு, உரிமையாளர் ஜான்கென்னடியிடம் ஒப்படைக்கப்பட்டது. லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட அலுவலர்கள் இருவரையும் அங்கேயே வைத்து நீண்ட நேரம் விசாரித்தனர்.

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடிகளில் ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடியைச் சேர்ந்த போலீசார் வாகனங்களில் வருவோரிடம், போக்குவரத்து விதியை மீறியதாக கூறி பணவசூல் வேட்டை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அந்த சோதனை சாவடிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

இதுபற்றி அங்கிருந்த போலீசாரிடம் கேட்டபோது, இது எங்கள் பணம் இல்லை. யார் பணம் என்றே தெரியாது என்று மறுத்தனர். இதையடுத்து அந்த சாவடியில் பணியாற்றும் 10 போலீசாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ரூ. 10 ஆயிரம் லஞ்சம் - விவசாயத் துறை அலுவலக ஆடிட்டர் நாகராஜன்,உதவியாளர் வெங்கடாசலம் கைது.

சென்னை, செப். 30-

சென்னை சேப்பாக்கம் வேளாண்துறை மண்டல தணிக்கை அலுவலகத்தில் ஆடிட்டராக இருப்பவர் நாகராஜன் (53). இவரது உதவியாளர் வெங்கடாசலம்.

சில நாட்களுக்கு முன்பு நாகராஜன் சிட்லபாக்கத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வெங்கடாசலத்துடன் சென்றார். அப்போது அவர் தணிக்கை செய்தபோது அம்மையத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அவர், மைய பொறுப்பாளர் ரகுராமனிடம் சென்று உங்கள் மையத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்றார். இதற்கு ரகுராமன் சம்மதித்தார்.

பின்னர் ரகுராமன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகுராமனிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அவர் அந்த நோட்டுக்களை உதவியாளர் வெங்காசலத்திடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து வெங்கடாசலம், நாகராஜனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

29 செப்டம்பர் 2009

லஞ்சம் - போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் .



மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன். கடந்தாண்டு குற்றவழக்குகள் தொடர்பான தனிப்படையில் இருந்தார். அப்போது குற்றவாளி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க, ஏட்டு கண்ணன் என்பவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

"இன்ஸ்பெக்டர் கூறியபடிதான் லஞ்சம் வாங்கினேன்' என்று அவர் வாக்குமூலம் கொடுத்தார். முதல் குற்றவாளியாக அதிவீரராமபாண்டியன் வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கமிஷனர் நந்தபாலனுக்கு லஞ்சஒழிப்புத்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

26 செப்டம்பர் 2009

நண்டலாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை.

பொறையாறு, செப். 26: நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள நண்டலாறு காவல் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டதில் ரூ.4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

பொறையாறு அருகே நண்டலாற்றுப் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எல்லையையொட்டி, காவல் சோதனைச் சாவடி உள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, அதிகமான வாகனங்கள் இந்த எல்லையைத் தாண்டி செல்லும் போது, அந்த வாகனங்களை சோதனைச் சாவடியில் நிறுத்தி கட்டாய வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை ஆய்வுக் குழு அலுவலர் மதுரம், நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மாணிக்கவாசகம், ஆய்வாளர் சித்திரவேல் ஆகியோர் நண்டலாறு சோதனைச் சாவடியில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பணியிலிருந்த திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், பொறையாறு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ், தலைமைக் காவலர்கள் நாராயணசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டைப் பை, மோட்டார் சைக்கிள் டேங்க் கவர் ஆகியவற்றிலிருந்து ரூ. 4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அங்கு சோதனை செய்ததில், வாகனத் தணிக்கையின்போது பதிவு செய்யப்படும் போலீஸ் நோட்டீஸýகளை நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர். சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அரசு ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய சார் நிலை கருவூல காசாளர் கைது .


செஞ்சி: ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க, லஞ்சம் கேட்டதாக செஞ்சி சார் நிலை கருவூல காசாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக வேலை செய்பவர் மதியழகன்.


இந்த அலுவலத்தின் மூலம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆறு பேருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஒரு லட்சத்து மூன்று ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, செஞ்சி சார் நிலை கருவூலத்தில் தயார் நிலையில் இருந்தது. காசோலையை வழங்க, கருவூல காசாளர் ஞானசேகரன் மதியழகனிடம் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் மதியழகன் புகார் செய்தார்.


லஞ்சப்பணத்தை மதியழகன் கொடுக்கும் போது வெளியே காத்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் ஞானசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்த ஞானசேகரனை, விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதுவரை, லஞ்ச வழக்குகளில் பொதுமக்கள் புகார் கொடுப்பது வழக்கம். முதன் முறையாக, அரசு அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவரே, மற்றொரு அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம்.

டெல்லி: ஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.

வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.

இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம்.

ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம்.

மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள்தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர்.

இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.

இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன.

இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் - ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா , அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.

கடைக்காரரை மிரட்டி ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ரெயில்வே இன்ஸ்பெக்டர் கைது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் தங்கராஜ் (46). இந்த கடையில் பாத்திரங்கள் மற்றும் டி.வி., மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கராஜின் பாத்திரக்கடைக்கு கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி வந்தார். கடையின் மேல்தளத்தில் உள்ள டி.வி. ஷோரூமில் பொருட்களை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண், ரெயில்வே காப்பர் கேபிள்களுடன் கடைக்கு வந்தார். அதை தங்கராஜிடம் விலைக்கு வாங்கி கொள்ளும்படி கேட்டார். அதற்கு தங்கராஜ் மறுத்துவிட்டார்.

அந்த நேரத்தில் அங்கிருந்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் துரைசாமி அந்த பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். விசாரணையில் அந்த பெண் ரெயில்வே காப்பர் கேபிளை திருடியது தெரிய வந்தது.

உடனே இன்ஸ்பெக்டர் துரைசாமி கடைக்கு போன் பண்ணி தங்கராஜிடம் பேசினார். நான் வழக்கு போட்டால் உன் கடை பெயர் கெட்டுபோகும். ஜென்மத்துக்கும் நீ வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. நான் ஏட்டை அனுப்பி வைக்கிறேன் ரூ.40 ஆயிரம் கொடுத்து விடு. நான் வழக்கில் உன்னை சேர்க்காமல் விட்டு விடுகிறேன் என்றார்.

அதை கேட்டு தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து 10 நாட்களாக போனில் தொந்தரவு செய்து கடைசியாக ரூ.30 ஆயிரமும் ஒரு ஹோம் தியேட்டரும் கொடு என்று கேட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டரின் போன் மிரட்டலை தங்கராஜ் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தார்.

சி.பி.ஐ. போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் 2 கார்களில் கும்மிடிப்பூண்டி சென்றனர்.

தங்கராஜின் பாத்திரக்கடையில் லஞ்சம் வாங்குவதற்காக துரைசாமி காத்து இருந்தார். கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதால் பஜாருக்கு வரும்படி தங்கராஜ் அழைத்தார். தங்கராஜ் பவுடர் தடவிய ரூ.500 நோட்டு கட்டுகளுடன் காரில் சென்றார். அந்த காரில் ஒரு சி.பி.ஐ. போலீஸ் அதிகாரியும் நண்பர் போல் இருந்து கொண்டார்.

பஜாரில் காரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் துரைசாமியிடம் பணத்தை கொடுத்தார். காரில் ஏறி அமர்ந்து பணத்தை எண்ணி பார்த்து வாங்கி கொண்டார். ரூ.40 ஆயிரம் கிடைத்த மகிழ்ச்சியில் அதை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தப்படி கீழே இறங்கினார்.

உடனே தயாராக இருந்த சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர். நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

தர்மபுரி அருகே ரூ. 1500 லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேத்துவட்டிப்பட்டி ஊராட்சியில் உதவியாளராக இருப்பவர் சரவணன் (வயது 34). இதே பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீர் திறப்பாளராக கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கோபாலுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வந்தது. அந்த தொகைக்காக காசோலையை கேட்டபோது ஊராட்சி உதவியாளர் சரவணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூ. 1500 பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து கோபால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்று காலை கோபால், ஊராட்சி உதவியாளர் சரவணனுக்கு ரூ. 1500 லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் ஆகியோர் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
1 1

போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன்

எண்ணூர் : ஷேர்ஆட்டோக்களில் அபராதத்திற்கு மேல் "கெடு பிடி' வசூலித்த போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கினர்.
சென்னையை அடுத்த எண்ணூர், மணலி, மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஷேர்ஆட்டோக்களில் கெடு பிடி வசூல் நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், மாறுவேடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன், தலைமை காவலர்கள் சுந்தர், அருணாச்சலம் ஆகியோர் அப ராத கட்டணத்துடன் கூடுதலாக வசூல் செய்தனர். அவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்