கும்மிடிப்பூண்டி பஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் தங்கராஜ் (46). இந்த கடையில் பாத்திரங்கள் மற்றும் டி.வி., மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கராஜின் பாத்திரக்கடைக்கு கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி வந்தார். கடையின் மேல்தளத்தில் உள்ள டி.வி. ஷோரூமில் பொருட்களை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண், ரெயில்வே காப்பர் கேபிள்களுடன் கடைக்கு வந்தார். அதை தங்கராஜிடம் விலைக்கு வாங்கி கொள்ளும்படி கேட்டார். அதற்கு தங்கராஜ் மறுத்துவிட்டார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் துரைசாமி அந்த பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். விசாரணையில் அந்த பெண் ரெயில்வே காப்பர் கேபிளை திருடியது தெரிய வந்தது.
உடனே இன்ஸ்பெக்டர் துரைசாமி கடைக்கு போன் பண்ணி தங்கராஜிடம் பேசினார். நான் வழக்கு போட்டால் உன் கடை பெயர் கெட்டுபோகும். ஜென்மத்துக்கும் நீ வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. நான் ஏட்டை அனுப்பி வைக்கிறேன் ரூ.40 ஆயிரம் கொடுத்து விடு. நான் வழக்கில் உன்னை சேர்க்காமல் விட்டு விடுகிறேன் என்றார்.
அதை கேட்டு தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து 10 நாட்களாக போனில் தொந்தரவு செய்து கடைசியாக ரூ.30 ஆயிரமும் ஒரு ஹோம் தியேட்டரும் கொடு என்று கேட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டரின் போன் மிரட்டலை தங்கராஜ் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தார்.
சி.பி.ஐ. போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் 2 கார்களில் கும்மிடிப்பூண்டி சென்றனர்.
தங்கராஜின் பாத்திரக்கடையில் லஞ்சம் வாங்குவதற்காக துரைசாமி காத்து இருந்தார். கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதால் பஜாருக்கு வரும்படி தங்கராஜ் அழைத்தார். தங்கராஜ் பவுடர் தடவிய ரூ.500 நோட்டு கட்டுகளுடன் காரில் சென்றார். அந்த காரில் ஒரு சி.பி.ஐ. போலீஸ் அதிகாரியும் நண்பர் போல் இருந்து கொண்டார்.
பஜாரில் காரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் துரைசாமியிடம் பணத்தை கொடுத்தார். காரில் ஏறி அமர்ந்து பணத்தை எண்ணி பார்த்து வாங்கி கொண்டார். ரூ.40 ஆயிரம் கிடைத்த மகிழ்ச்சியில் அதை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தப்படி கீழே இறங்கினார்.
உடனே தயாராக இருந்த சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர். நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
26 செப்டம்பர் 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக