புதியவை :

Grab the widget  Tech Dreams

09 ஜூன் 2010

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் : 4 பேர் சஸ்பெண்டு



பொள்ளாச்சியில் உடுமலை ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏழைகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அவர்களிடம் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நர்சுகள் லஞ்சம் கேட்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து குவிந்தன.

அதன் பேரில் சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நல பணியாளர்கள் துறை கூடுதல் இயக்குனர் புருசோத்தம் விஜயகுமார் மற்றும் 11 பேர் இன்று காலை 7.30 மணிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அப்போது நர்சு மற்றும் ஊழியர்கள் வெளிப்படையாகவே நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு பெறுவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நோயாளிகள் போல் வந்த மருத்துவத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்ட ஊழியர்கள் 3 பேரையும், ஒரு நர்சையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அடுத்த கட்டமாக அதிரடி நடவடிக்கையிலும் இறங்கினார்கள். லஞ்சம் வாங்கிய 4 பேரையும் “சஸ்பெண்டு” செய்து உத்தரவிட்டனர்.

சில நர்சுகள் தங்களுக்கு ஒதுக்கிய பணியை விட்டு விட்டு மாற்று பணியிலும் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். மொத்தம் 4 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அதன் பின்னர் கூடுதல் இயக்குனர் புருசோத்தம் விஜயகுமார் நிருபர்களிடம் கூறும்போது தமிழ்நாடு முழுவதும் இந்த சோதனை நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

பெருந்துறையில் நடந்த சோதனையில் ஒரு டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மற்ற இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றார்.



கருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை

பெசன்ட்நகர் மயான பூமியில் பிணம் எரிக்க லஞ்சம்; ஊழியர் “சஸ்பெண்டு”

சென்னை மாநகராட்சி சார்பில் மயான பூமியில் எரியூட்டும் பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பெசன்ட் நகர் மயானபூமி அழகுபடுத்தும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மயானபூமியில் நேற்று 8 எரியூட்டும் பணிகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் நேரிடையாக தொலைபேசி மூலம் எரியூட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தாரிடம் எரியூட்டும் பணிகளுக்காக மாநகராட்சி ஊழியர்கள் பணம் கேட்டார்களா? என்று கேட்டறிந்தார்.

அப்பொழுது பலர் எரியூட்டும் பணிகளுக்கு பணம் வழங்கியதாக புகார் தெரிவித்ததன் பேரில் உடனடியாக பெசன்ட் நகர் மயானபூமி பொறுப்பாளர் ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்தார். 2 மயான உதவியாளர்களை பணிமாறுதல் செய்ய உத்தரவிட்டார்.


08 ஜூன் 2010

அமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர் கைது



உடுமலை : "செய்தி போட்டு மானத்தை வாங்கிவிடுவேன்' என அமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபரை அமராவதி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அமராவதி வனச்சரகர் ஜெயராமன் அமராவதி நகர் போலீசில் கொடுத்த புகார் மனு: உடுமலையை சேர்ந்த மணி வார இதழில் பணியாற்றி வருவதாக கூறிக்கொண்டு, அடிக்கடி வனச்சரக அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு வேண்டிய நபருக்கு சிபாரிசு செய்தும், அந்த சிபாரிசை ஏற்க மறுத்ததால் செய்தி வெளியிடுவதாக மிரட்டுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார்.


இந்நிலையில், மே 31ம் தேதி, மாலை 3.00 மணிக்கு, வனச்சரக அலுவலகத்தில் ஊழியர்களுடன் இருந்த போது, சந்தனக்கட்டை கடத்திய நபர்களுக்கு உடந்தையாக உள்ளதாக உங்கள் மீது புகார் உள்ளது. பத்தாயிரம் பணம் தரவில்லையென்றால் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவேன் என மிரட்டி வருகிறார். இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை செய்த அமராவதி நகர் போலீஸ் துணை ஆய்வாளர் சுப்பையன் ,தலைமை காவலர் குரு ஆகியோர், ...,385 (அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 452 (மிரட்டுதல்), 506 (2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் (எண் 116/10) வழக்கு பதிவு செய்தனர்.

மணியை கைது செய்து, ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே நிருபர் மணி ஏற்கனவே பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாக ஒரு வழக்கு உடுமலைபேட்டை தளி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது .





மதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது


மதுரை : கட்டடத்தின் அருகே செல்லும் மின் வயர்களில் பாதுகாப்பிற்காக பி.வி.சி., பைப்களை பொருத்த, 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாகாளிப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகனை போலீசார் கைது செய்தார்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(43). கத்தாரில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். கீரைத்துறை தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். மின் வயர்கள் வீட்டின் மிக அருகில் செல்வதால், மாடியில் கட்டட வேலை செய்யும் போது மின் கசிவு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக மின்வயர்களில் பி.வி.சி.,பைப்களை பொருத்த அனுமதிக்குமாறு, மாகாளிப்பட்டி மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் முருகனிடம்(40), கிருஷ்ணமூர்த்தி விண்ணப்பித்தார்.

முருகன், ""நீங்களே பி.வி.சி.,பைப்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனக்கு 3000 ரூபாய் லஞ்சம் கொடுங்கள்,'' என கூறியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். பின் பேரம் பேசியதில், 2500 ரூபாய் தர சம்மதித்தார்.

அவர் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை 6 மணிக்கு முருகனிடம் ரசாயனம் தடவிய 2500 ரூபாயை கிருஷ்ணமூர்த்தி கொடுத்தார். மறைந்திருந்த டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன், முருகனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

ஆரப்பாளையத்திலுள்ள முருகன் வீட்டிலும் போலீசார் இரவு சோதனை நடத்தினர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து, ஓராண்டிற்கு முன் மதுரைக்கு மாறுதலாகி வந்துள்ளார். இதேபோல், இதற்கு முன் அவர் மீது பல புகார்கள் வந்துள்ளன. அதிலிருந்து தப்பிய முருகன், நேற்று சிக்கிக்கொண்டார்.

சிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்


சிவகாசி : சிவகாசியில் வருவாய் ஆய்வாளர் ( ஆர்.ஐ., ) யாக இருப்பவர் பாலசுப்ரமணியன். இவர் இன்று காலையில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இவரை கையும் களவுமாக சுற்றி வளைத்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்தவுடன், பாலசுப்ரமணியன் பணத்தை தூக்கி எறிந்து விட்டு தப்பியோடினார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

05 ஜூன் 2010

இந்தியாவின் ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை?


மங்களூரு விமான விபத்துக்கு அங்கு அமைந் துள்ள விமான நிலையத் தின் அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதைப் போல சிக்கலான அமைப்புள்ள விமான நிலையங்கள் இந்தியாவில் பல உள்ளன.

மங்களூரு பாஜ்பே விமான நிலையம், "டேபிள் டாப்' விமான நிலையம் என்று அழைக் கப்படுகிறது. ஓடுபாதை தரையிலிருந்து உயரமாக, அல்லது மலைப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் இவ்விதம் அழைக்கப்படும். இதன் பழைய ஓடுபாதை, 6,000 அடி நீளமும், புதிய ஓடுபாதை, 8,300 அடி நீளமும் கொண் டவை.
மங்களூரு போல், காஷ் மீரின் லே மற்றும் ஸ்ரீ நகர், கேரளாவின் கோழிக் கோடு, பக்தோக்ரா, அகர் தலா, கவுகாத்தி, சில்சர், லெங்புய், போர்ட் பிளேர், குலு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைந் துள்ள சில விமான நிலையங்கள், சிக்கலான அமைப்பில் தான் அமைந் துள்ளன.

விமான நிலையம் மேட்டுப்பாங்கான பகுதியில் அமைந்திருந்தால் அதில் ஒரே திசையில் மட் டும் விமானத்தை இறக்க வேண்டி வரும். அதே போல், பிற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்தால், அந்நாடுகளின் மீது பறப் பது, எப்போதுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருக்கும்.

இந்த இரண்டுக்கும் உதாரணமாக அந்தமானில் உள்ள போர்ட் பிளேர் விமான நிலையம் உள்ளது. இங்கு ஒரே திசையில் மட்டும் தான் விமானத்தை இறக்க முடியும். காரணம் அதைச் சுற்றி அமைந்துள்ள மலைகள்.

அதேபோல் கேரளா, கோழிக்கோட்டிலுள்ள விமான நிலையத்தைச் சுற்றிலும் மலைகள் அமைந்திருப்பதால், வானிலை சரியாக இல் லாத காலங்களில் அங்கு விமானத்தை இயக்குவது, சிக்கலான விஷயம் தான். அதையும் விட, ஓடுபாதையின் விளிம்பில், ஒரு பெரிய பள்ளத்தாக்கும் இருக்கிறது.

துபோன்ற சிக்கல் நிறைந்த விமான நிலையங்கள் குறித்து அனுபவம் வாய்ந்த விமானிகள் கூறியதாவது: ஓடுபாதைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பானது அல்லது பாதுகாப்பில்லாதது என்று கூற இயலாது. ஆனால் அதை, தெளிவானது அல்லது சிக்கலானது என்று கூறலாம்.

பாதுகாப்பும், பாதுகாப் பின்மையும், பறப்பதிலும், ஓடுபாதையின் தரத்திலும் தான் இருக்கிறது. மலைப்பாங்கான விமான நிலையங்களில் மட்டுமே விபத்துக்கள் நிகழ்வது என்பது தவறு. சாதாரணமான பிற நிலையங்களிலும் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அப்படிப் பார்த்தால், அனைத்து ராணுவ விமான நிலையங்களுமே சிக்கல் வாய்ந்தவைதான்.

பெரும் பான்மையும் அவற்றின் ஓடுபாதை குறுகிய தூரம் கொண்டவையாகவும், சிக்கலான நில அமைப்பில் அமைந்தவையாகவும் தான் இருக்கும். ஒரு காலத்தில் சிக்கல் வாய்ந்ததாகக் கருதப்பட்ட கொச்சி விமான நிலையம், இன்று அவ்வாறு கருதப்படுவதில்லை. அகர்தலா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம், வங்கதேசத்தின் மீதுதான் பறந்தாக வேண்டும் என்ற சிக்கலான நிலை, இன்னும் நீடிக்கிறது.

ஓடுபாதை, ஒன்பதாயிரம் அடி நீளம் கொண்டது. அது, நேபாளம் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு மிகக் கவனமாகத் தான் தரையிறக்க வேண் டும். நாட்டின் மிக உயர்ந்த விமான நிலையம், காஷ்மீரின், லே. அது கடல் மட் டத்திலிருந்து 10 ஆயிரத்து 682 அடி உயரத்தில் இருக்கிறது. அங்குள்ள சிக்கல், விமானிகளுக்கு மட்டுமல்ல, விமானத்துக்கும் சேர்த்தே உள்ளது. அவ் வளவு உயரத்தில் விமானத்தை இறக்கிப் புறப்படுவது, சாதாரண காரியமல்ல. லே ஓடுபாதையில் விமானி ஏதாவது தவறு செய்து விட்டால், அவர் இதர விமானிகளுக்கெல் லாம் எடுத்துக்காட்டாகி விடுவார். அதாவது அங்கு கரணம் தப்பினால், மரணம் என்ற நிலை தான். பொதுவாக ஓடுபாதையைக் குற்றம் சொல்ல முடியாது. அதே நேரம், விமானி விமானத்தை இரண்டு முறை மேலே எடுக்கவோ, கீழே இறக்கவோ இயலாது. தனியார் விமான நிறுவனங்களின் கோரிக்கைகளை ஏற்று, பாதுகாப்பு விதிகளை அரசு, நீர்த்துப் போகச் செய்து விட்டது.


2005 வரை, ஒருவிமானி, வர்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு, அவர், 250 மணி நேரம் பறந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அது, 200 மணியாகக் குறைக்கப்பட்டு விட்டது. இந்திய விமானிகள், வர்த்தக விமான உரிமத்தைப் பெறுவதற்கு முன்பு, பயணிகள் விமான இயக்க அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதி வேறு எந்த நாட்டிலும் கிடையாது. ராணுவ விமானத்தை விட பயணிகள் விமானம் சிக்கலான அமைப்புடையது. ராணுவ விமானத்தை இயக்கிய வெளிநாட்டு விமானிகளில் பலர், இங்கு வந்து பயணிகள் விமானத்தை இயக்குகின்றனர். இவ்வாறு விமானிகள் தெரிவித்தனர்.



04 ஜூன் 2010

பெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கி கொலை செய்த மிருகம்


நாகர்கோவில் : பெற்ற மகளை கற்பழித்ததுடன், அதனால் உருவான கர்ப்பத்தை மறைக்க கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.




கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் புரூஸ்லெட். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லிஜாஸ்மின் (18). பிளஸ்டூ படித்து வந்தார். ஷெர்லியின் தாயார் கேன்சர் நோயில் இறந்து விட்டார். இதை தொடர்ந்து ஐடா என்ற பெண்ணை புரூஸ்லெட் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் , கடந்த 29ம் தேதி காலை புரூஸ்லெட்டும், ஐடாவும் மகளை வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க தண்ணீர் தொட்டியில் ஜாஸ்மின் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 14 சவரன் நகைகள் திருட்டு போனது. இது பற்றி அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பவம் நடந்த வீட்டில் மிளகாய்பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் கொள்ளையர்கள் பக்கம் போலீசாரை திசை திருப்ப முயற்சி நடைபெற்றது. கைரேகை அடிப்படையில் போலீசார், புரூஸ்லெட்டை கைது செய்தனர். "முறைப்படி' விசாரித்த போது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

திசை திருப்ப முயற்சி: மகளுடன் உடல் உறவு கொள்ள முயன்று நடக்காததால், மயக்கமடைய செய்து உடல் உறவு கொண்டதால், அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். மாத்திரை கொடுத்தும் கர்ப்பம் கலையாததால் கொலை செய்ய முடிவு செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று 2வது மனைவியை நாகர்கோவிலுக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்த புரூஸ்லெட், மகளை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளார். போலீசார் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளையும் எடுத்து சென்றுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் ஒரு இடத்தில் ஷூவில் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். புரூஸ்லெட் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


பேத்தியை கற்பழித்து கொலை செய்த மகனை தூக்கில் போடும்படி தாய் ஆவேசம்
:
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட்; ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மகள் ஷெர்லி ஜாஸ்மின் (18); பிளஸ் 2 படித்து வந்தார். ஷெர்லியின் தாய், நோய்வாய் பட்டு இறந்து விட்டார். இரண்டாவதாக ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்தான் ரூஸ்வெல்ட். பல பெண்களுடன் இவனுக்கு தொடர்பு உண்டு. பெற்ற மகள் என்றும் பாராமல், ஷெர்லியையும் தன் இச்சைக்கு இரையாக்கினான். மகள் கர்ப்பம் தரித்ததால், அவரை கொலை செய்த ரூஸ்வெல்ட், தண்ணீர் தொட்டியில் மகளின் உடலைப் போட்டான். பின், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினான். போலீசார் விசாரணையில், ரூஸ்வெல்ட் கொலை செய்தது தெரியவந்து, தற்போது ரூஸ்வெல்ட், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தால், ரூஸ்வெல்டின் தாய் ராஜம் மனம் நொந்து உள்ளார். அவர் கூறியதாவது: என் மகன், சிறு வயதில் இருந்த பெண் பித்தனாக இருந்து வந்தான். எத்தனையோ முறை கண்டித்தும், அவன் திருந்தவில்லை. திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என நினைத்து, திருமணம் செய்து வைத்தோம். மனைவியையும் அடித்து உதைத்தான். பெண் குழந்தை பிறந்த பின், இவன் கொடுமை தாங்காமல் மருமகள், நோய்வாய்பட்டு இறந்து போனார். இவன் வருவதற்காக, மூன்று நாட்கள் அவள் உடலை வைத்திருந்தோம். மூன்றாவது நாள், "நான் இறுதிச் சடங்குக்கு வரமுடியாது' என, போனில் தகவல் கூறிவிட்டான்.

மூன்று மாதம் கழித்து வந்து, "எனக்கு மறுமணம் செய்து வைய்யுங்கள்' என்று கூறினான். வேறு வழியில்லாமல், ஐடா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அவனது பெண் பித்து விடவில்லை. இதை கண்டித்த எனது கணவரை, தந்தை என்றும் பாராமல் கல்லால் தாக்கினான். இதில் படுக்கையான அவர், 90வது நாள் இறந்து விட்டார். இவனது மோசமான போக்கால், சொத்துக்களை ஷெர்லின் ஜாஸ்மின் பெயருக்கு எழுதி வைத்து விட்டோம். அடிக்கடி பேத்தியை மட்டும் பார்த்து விட்டு வருவேன்.

ஒரு நாள், ஜாஸ்மினைப் பார்க்க நான் சென்றபோது, கதறி அழுது கொண்டிருந்தார். அப்பா கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினார். நான், "கடவுள் காப்பாற்றுவார்' என, ஆறுதல் கூறினேன். இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. பெற்ற மகளை இப்படி கொடூரமாக கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடிய பாவியை, சும்மா விடக்கூடாது. அவனை தூக்கில் போட வேண்டும். அவனை என் வயிற்றில் சுமந்ததற்காக வெட்கப்படுகிறேன். அவனுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ராஜம் கூறினார்.

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது



வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் மே 5ம் தேதி விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்த சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவி(55), "500 ரூபாய் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரைப்பேன்' எனக் கூறினார். லஞ்சம் வழங்காததால் மனுவை கிடப்பில் போட்டார். மீண்டும் ஜூன் 1ம் தேதி ஒன்றிய அலுவலகத்திலிருந்த கமலாதேவியை சந்தித்த சந்திரசேகரன், "எனக்கு பின்னால் கொடுத்த மனுக்களை பரிந்துரைத்து விட்டீர்கள். லஞ்சமாக 500 ரூபாய் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மனுவை பரிந்துரைத்து உதவ வேண்டும்' என கெஞ்சினார். ஆனால், "பணமில்லாமல் காரியமாகாது' என கமலாதேவி, கறாராக கூறிவிட்டார்.

இதையடுத்து சந்திரசேகரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை, அலுவலகத்தில் இருந்த கமலாதேவியிடம், நேற்று மதியம் 2.30 மணிக்கு வழங்கினார். பணத்தை வாங்கிய கமலாதேவியை டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் சுற்றி வளைத்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.

அதற்குள் கமலாதேவி, ரூபாய் நோட்டுகளை கிழித்து வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரது கைகளை தட்டி விட்டு கிழிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் கமலாதேவியை கைது செய்தனர்.

கமலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்ற போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கமலாதேவியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, போலீசார் காரில் அழைத்து சென்றனர்.

பெப்ஸி குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த தவளை



குளிர்பான பாட்டிலுக்குள் இரும்புத்துண்டு, கரப்பான் பூச்சி, பிளாஸ்டிக் துண்டு கிடந்து பார்த்திர்க்கிறோம். இப்போது ஒரு குளிர்பான பாட்டிலுக்குள் தவளை இறந்துகிந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (36). வக்கீல் குமஸ்தாவான இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., "பெப்சி' பாட்டில் வாங்கினார்.

அதிக, "கூலாக' இருந்ததால் கையில் வைத்து குலுக்கிய போது பாட்டிலினுள் ஏதோ கிடப்பது தெரிந்தது. "பெப்சி' பாட்டிலுக்கு பில் வாங்கிக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்குச் சென்று சோதனை செய்ததில் பாட்டிலினுள், தவளை இறந்து கிடப்பது தெரிந்தது.

மூடி சீல் வைக்கப்பட் குளிர்பான பாட்டிலில், தவளை இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



03 ஜூன் 2010

பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம்: சர்வேயர்கள் இரண்டு பேர் கைது


சிவகாசி: சிவகாசியில், பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் தலைமை சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி தாலுகா, கீழான்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிவகாசியில் இவருக்கு 10 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. இந்நிலத்தை "சப்-டிவிஷன்' செய்து தனிப்பட்டா வழங்கக் கோரி, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கடந்த ஏப்., 13ம் தேதி மனு அளித்தார். தாசில்தாரும் மனுவை எதிர்கோட்டை சர்வேயர் வேலுவுக்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.

15 நாள் ஆகியும் தகவல் எதுவும் வராததால் கிருஷ்ணசாமி, சர்வேயர் வேலுவிடம் பட்டா குறித்து கேட்டார். நிலத்தில் சிக்கல் உள்ளதால், தலைமை சர்வேயர் நிலத்தை அளக்க வேண்டும். தனக்கும், தலைமை சர்வேயருக்கும் தலா 5,000 ரூபாய் தந்தால் தானே பட்டா வாங்கிக் கொடுப்பதாகவும், சந்தேகமிருந்தால் தலைமை சர்வேயரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று வேலு கூறினார்.
கிருஷ்ணசாமி, மொபைல் போனில் கேட்டபோது "பணத்தை வேலுவிடமே கொடுங்கள். பட்டா கொடுத்து விடுகிறோம்' என, தலைமை சர்வேயர் கூறினார்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயை, சாட்சியாபுரம் ஓட்டல் அறையில் தங்கியிருந்த வேலுவிடம், நேற்று மாலை 3 மணிக்கு கிருஷ்ணசாமி கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார், பணத்தை கைப்பற்றி வேலுவையும், பின்னர் தலைமை சர்வேயர் சேதுபாண்டியனையும் கைது செய்தனர். ரிசர்வ் லைனிலுள்ள வேலுவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

மாத சம்பளம் ஆயிரம் :சொத்து மதிப்போ கோடி !


மும்பை : ஊழல் செய்து, "கோடிகளை' அள்ளுவதில், அரசியல்வாதிகள் மட்டும் தான் சூரர்கள் என, நீங்கள் கருதினால், அந்த கருத்தை உடனே மாற்றுங்கள். அரசு அதிகாரிகள் பலர், "பலே கில்லாடி'களாக உள்ளனர்.


மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தில், உயரமான கட்டடங்களுக்கு, அனுமதியளிக்கும் கமிட்டியில், மூத்த அதிகாரியாக பணிபுரிந்தவர், சைலேஷ் மகிம்துரா. கட்டட அனுமதிக்காக, லஞ்சம் பெற்ற போது, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

தானே முனிசிபல் அலுவலகத்தில், இன்ஜினியராக பணிபுரிந்து வந்த, சுனில் ஜோஷி, கான்ட்ராக்டர் ஒருவரிடமிருந்து, லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 18 லட்ச ரூபாய் ரொக்க பணம், 17 லட்ச ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள், ஆடம்பர பங்களா, பண்ணை வீடு உள்ளிட்ட பல கோடி மதிப்புடைய, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புனே பொதுப்பணி துறையில், இன்ஜினியராக இருந்த விக்ரம் ஜாதவ், கான்ராக்டர் ஒருவரிடமிருந்து, ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றபோது, கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில், நடத்தப்பட்ட சோதனையில், ரொக்கமாக மட்டும், ஒரு கோடியே 68 லட்சம் ரூபாயும், 11 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு, பொதுப்பணி துறை இன்ஜினியரான மாருதி பால்கர், கான்ராக்டரிடமிருந்து, ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது சிக்கினார். அவரிடமிருந்தும், கோடிக்கணக்கான மதிப்புடைய பணம், தங்கம், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவங்கள் அனைத்தும், மும்பை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மட்டுமே. ஒரு ஆண்டில் மட்டும், இப்பகுதிகளில், 389 அரசு அதிகாரிகள் பிடிபட்டனர். வருவாய் துறையில் மட்டும் 91 பேரும், கல்வித் துறையில், 18 பேரும், சுகாதாரத் துறையில், 13 பேரும் பிடிபட்டுள்ளனர். நாடு முழுவதும், இது போன்று ரெய்டு நடத்தினால், இந்திய பொருளாதாரம் பன்மடங்கு வளரும் வகையில், பண மூட்டைகளை பெறலாமென, வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை.



பெ.நா.பாளையம்: கோவை, துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, 77 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது. துடியலூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இதில்
, 33 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சுகாதார செவிலியர் மற்றும் துடியலூர் வட்டார மருத்துவ அலுவலர் பெயரில், ஒவ்வொரு ஆண்டும் அரசு தலா 10 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தும். அவசர, அவசிய தேவைகளின்போது வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கிராமப்புற செவிலியர் இருவரும் கையெழுத்திட்டு பணத்தை வங்கியில் இருந்து பெற்று செலவழிக்கலாம்.

இதற்கு சரியான கணக்கு பராமரிக்க வேண்டும். இதன்படி துடியலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் 33 கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் இருப்பில் உள்ளது. இதில் இருந்து தலா 2,000 முதல் 6,000 ரூபாய் வரை கட்டாயமாக எடுத்து வர துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து நேற்று பகல் 2.00 மணிக்கு கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் போலீசார், துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில், கிராமப்புற சுகாதார செவிலியர்களிடம் போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத 77 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினர்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்
.பி., சண்முகப்பிரியா கூறியதாவது: தற்போது கைப்பற்றப்பட்ட ரொக்கம் கணக்கில் காட்டப்படாத பணமாக கொள்ளப்படும். விசாரணைக்கு பின், அரசு பணத்தை தவறாக கையாண்டதாக வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு சண்முகப்பிரியா கூறினார்.








02 ஜூன் 2010

கைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்வாளர் கைது


ஈரோடு : கைத்தறி உரிமையாளரிடம் 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட, ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் மற்றும் கைத்தறி ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த விஜயகுமார் (53), ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனராக உள்ளார். ஈரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கி பணிபுரிகிறார். பவானியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(43), கைத்தறி ஆய்வாளராக உள்ளார்.

ஈரோடு திண்டலைச் சேர்ந்த கோதண்டராமலிங்கம் (45), 24 தறிகளை வைத்து, சொந்தமாக தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், அரசின் நலத்திட்ட உதவி மூலம், விசைத்தறியாளர்கள் நலச்சங்கம் நிறுவ எண்ணினார். ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் விஜயகுமாரை, கோதண்டராமலிங்கம் சந்தித்தார். 3.50 லட்ச ரூபாய் லஞ்சமும், முன்பணமாக 25 ஆயிரம் ரூபாயும் தருமாறு விஜயகுமார் கேட்டார். மே 21ம் தேதி, 5,000 ரூபாய் கொடுத்த அவர், பாக்கித் தொகையை, நேற்று தருவதாக இருந்தது.

இதுபற்றி கோதண்டராமலிங்கம், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, தகவல் தெரிவித்தார். உதவி இயக்குனர் விஜயகுமாரிடம், கோதண்டராமலிங்கம் பணம் கொடுக்கும் போது, ஈரோடு லாட்ஜில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மற்றும் போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த தட்சிணா மூர்த்தியையும் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த, கணக்கில் வராத 81 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். கோவையில் இருக்கும் உதவி இயக்குனர் விஜயகுமாரின் வீட்டில் சோதனையிட, ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினர், கோவை சென்றனர்.

01 ஜூன் 2010

ரூ.2 ஆயிரம் லஞ்சம் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன்கைது .


ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ பர்மிட்டுக்காக 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ., மற்றும் புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த பாலு பிள்ளை மகன் செந்தில். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தன்னுடைய ஆட்டோவை எல்.பி.ஜி., காஸ் ஆட்டோவாக மாற்ற, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ., (வட்டார போக்குவரத்து அதிகாரி)விடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், புரோக்கர் அப்துல் ஜலீலை பார்க்க கூறினார். "பர்மிட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என, புரோக்கர் கூறியதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.

போலீசாரின் ஆலோசனையின்படி, நேற்று மதியம் 12 மணிக்கு புரோக்கர் அப்துல் ஜலீல் மூலம், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் செந்தில் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், புரோக்கர் மற்றும் ஆர்.டி.ஓ.,வை கையும், களவுமாக பிடித்தனர். அவர்களை கைது செய்து, திருச்சி அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

31 மே 2010

லஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .




செய்யூர்: செய்யூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன்(60). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விதிமுறைப்படி செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.

மனு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுகுப்பத்தைச் சேர்ந்த சர்வேயர் சேகரிடம்(48) விசாரணைக்கு சென்றது. அவர் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.

விருப்பம் இல்லாத குணசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், வெங்கடேசன், சரவணன் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் நோட்டுகளை குணசேகரின் சர்வேயர் சேகரிடம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.