22 டிசம்பர் 2009
ஒரே அலுவலகத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் : உடுமலையில் கூத்து
உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் பணி புரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. உடுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவுத்துறை தலைவரால் செப்.,9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, காளியப்பன் சார்பதிவாளராக நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராஜகோபால் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தார். "பதிவுத் துறை தலைவருக்கு சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் அக்., 28ல் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மீண்டும் பணியில் சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துறைக்கு கடிதம் அனுப்பி விட்டு இன்று முதல் சார்பதிவாளராக மீண்டும் பணியாற்றுவேன்' என, கூறியபடியே, சார்பதிவாளர் சீட்டில் அமர்ந்து, பணிகளை கவனிக்க துவங்கினார்.
தற்போது சார்பதிவாளராக உள்ள காளியப்பன், சிறிது நேரத்தில் அலுவலகத்திற்குள் வந்தார். அவரது இருக்கையில், ராஜகோபால் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அவரும் அதே இடத்தில் இருக்கை போட்டு அமர்ந்தார். ஒரே அலுவலகத்தில், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அலுவலர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். பத்திரப்பதிவு பணிகளுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள், அலுவலகம் துவங்கியவுடன் நடந்த "கூத்தை' குழப்பத்துடன் ரசித்தனர்.
சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபால், டேபிளில் இருந்த பைல்களின் பெயர்களை கூப்பிட்டு பதிவு பணிகளுக்காக அழைத்தார். ஆனால், யார் உண்மையான சார்பதிவாளர் என குழப்பம் நீடித்ததால், பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்குள் செல்லவில்லை. பணிகள் முழுவதும் ஸ்தம்பித்ததால் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். துறை உத்தரவு இல்லாமல் அலுவலக பணிகளை மேற்கொள்ள முயன்றது குறித்து முன்னாள் அதிகாரி ராஜகோபாலிடம் சார்பதிவாளர் காளியப்பன் கேட்டார். அதற்கு, "உயர்நீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் நான் பணியில் ஈடுபவேன்' என ராஜகோபால் தெரிவித்தார். யாருக்கு பொறுப்பு என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதிவாளர் அலுவலகத்தில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பதிவாளர் ராஜகோபால் உடுமலை அலுவலகத்திற்கு வந்தார். சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபாலிடம்,"துறை உத்தரவு இல்லாமல் பணியில் சேர முடியாது; முறையான உத்தரவு பெற்ற பின் அலுவலகத்திற்குள் வரவும்' என தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட பதிவாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் பணியாற்றியதால் உடுமலை சார்பதிவாளராக இருந்த ராஜகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பதிவுத் துறை தலைவர் உத்தரவு இல்லாமல் மீண்டும் அவர் பணியில் சேரமுடியாது. விதிமுறைகளை மீறி சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அரசு அதிகாரிகளையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ராஜகோபால் செயல்பட்டுள்ளார். தற்போது, பணியில் உள்ள சார்பதிவாளர் காளியப்பனே தொடர்ந்து இந்த பணியில் நீடிப்பார். அவரிடம் மேற்கொள்ளப்படும் பதிவுகளே செல்லும். முறையான உத்தரவுகள் இல்லாமல் அரசு அலுவலகத்தில் நுழைந்து இடையூறு மற்றும் குழப்பம் ஏற்படுத்தியவர் மீது உடுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக