புதியவை :

Grab the widget  Tech Dreams

28 டிசம்பர் 2009

ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது


விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்ச வசூலில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அரசு விடுமுறை தினமான நேற்று காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.

அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும்.

புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் டிச., 26ல், எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்திருந்தனர். 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக