புதியவை :

Grab the widget  Tech Dreams

04 டிசம்பர் 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.22 ஆயிரத்து 670 பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 4-
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜன். இவருக்கு சொந்தமான வேன் கடந்த 23.11.09 அன்று கிருஷ்ணன்கோவில் அருகே விபத்துக்கு உள்ளானது. அந்த வேன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வேனை எடுத்து வருவதற்காக தேன்ராஜன் தனது டிரைவர் குருசாமி என்பவரை அனுப்பினார். இதற்காக குருசாமி வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் வேனை விடமுடியும் என்று கூறிய தோடு ஆர்.சி.புக் மற்றும் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிரைவர் குருசாமி தனது உரிமையாளர் தேன் ராஜனிடம் கூறினார். இதையடுத்து தேன்ராஜன் விருதுநகர் லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி டிரைவர் குருசாமி நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார். ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த கணேஷ் சுப்பிரமணியம் உங்களுடைய ஆர்.சி.புத்தகம் மற்றும் சான்றிதழ்களை விருதுநகருக்கு அனுப்பி விட்டேன் என்றும், அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
அந்த சமயம் வெளியில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்களை கண்டதும் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு உலாவிக்கொண்டிருந்த புரோக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இரவு 10 மணி வரை போலீசார் நடத்திய சோதனையில் ஏஜெண்டுகள் சரவணன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 670 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம், தற்காலிக ஊழியர் சிங்காரம் ஆகியோரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக